தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினர் சமாதானமாக வேண்டுகோள் - ஆயர்.அசோக்குமார்

author img

By

Published : May 12, 2022, 11:03 PM IST

ஆயர்.அசோக்குமார்

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர் பேரவை கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த கூட்டத்தில், பேராயர் மற்றும் நிர்வாக குழுவினர்களுக்கிடையே நிலவும் போட்டியால் திருச்சபையின் ஆன்மிகப் பணிகளும், கல்வி, மருத்துவம், சமூக மற்றும் பொருளாதார பணிகளும், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆயர்.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி: தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் கீழ் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும், கல்வி நிறுவனங்களும் இதனை நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பேராயர் மற்றும் நிர்வாக குழுவினர் என இரு தரப்பினர் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருவதால், இதனை நம்பி கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது மற்றும் திருச்சபையின் வளர்ச்சி முற்றிலும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர் பேரவை கூட்டமைப்பு சார்பில் இன்று திருச்சி தூய திரிந்துவ பேராலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு, பாண்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சபைக்கு போட்டிப் போடும் இரு தரப்பினர்: கூட்டத்திற்கு பின் ஆயர் பேரவையின் கூட்டமைப்பின் சார்பில் ஆயர்.அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகப் பிரச்னை காரணமாக இருதரப்பினர் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. பேராயர் ஓய்வு பெற்று விட்டார் என்று ஒரு தரப்பும், ஆட்சி மன்றம் ஓய்வு பெற்று விட்டது என்று மற்றொரு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு திருச்சபையின் ஆன்மிக வளர்ச்சிக்கு இடையூறாகவும், திருச்சபை நிர்வாகத்திற்கு பெரும் பிரச்னையாகவும் இருப்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.

சமாதானமாக போக வேண்டுகோள்: இதனால், திருச்சபையின் ஆன்மிகப் பணிகளும், கல்வி, மருத்துவம், சமூக மற்றும் பொருளாதாரப் பணிகளும், ஏழை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை சலுகைகளையும், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி திருச்சபையை முன்னேற்றப் பாதைக்கு நடத்திச் செல்ல வேண்டும்' என ஆயர் பேரவையின் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயர் பேரவையின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேட்டி

இதையும் படிங்க: பீஃப் பிரியாணி புறக்கணிப்பிற்கு எதிர்ப்பு- திருப்பத்தூர் ஆட்சியர் அளித்த பரிசை திருப்பியளித்த கவிஞர் சுகிர்தராணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.