கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் கோடிக்கணக்கில் கொள்ளை - உரிமையாளரிடம் வருமான வரித்துறை விசாரணை

author img

By

Published : Apr 29, 2022, 6:54 AM IST

திருப்பூரில் கருப்பு பணம் கொள்ளை

திருப்பூரில் கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் பல கோடி ருபாய் கருப்பு பணம் கொள்ளையடித்த தொழிலாளர்களை கைது செய்த காவல்துறையினர் பணம் மற்றும் சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். பணத்தைப் பறிகொடுத்த உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள குள்ளேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி(71). இவர் திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீடும் நிறுவன வளாகத்திலேயே உள்ளது. இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் ஆகி சென்றுவிட்டனர். அவரது வீட்டில் துரைசாமி மற்றும் மனைவி தனலட்சுமி மட்டுமே வசித்து வருகின்றனர்.

வீட்டுக்கு எதிரே துரைசாமிக்கு சொந்தமான பழைய வீடு ஒன்று பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி பழைய வீட்டில் இரண்டு சவரன் நகை ஒன்றரை லட்சம் பணம் கொள்ளையடிக்கபட்டதாக துரைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கு தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ், அவரது தம்பி சக்தி, தொழிலாளர்கள் தாமோதரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பழைய வீட்டில் பண மூட்டை.. : இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், காவல்துறையினருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. பின்னர் நால்வரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 30 சவரன் நகை, 16 லட்சம் ரூபாய் பணம், 2 சொகுசு கார், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் பல சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறை சதீஷ் மற்றும் தொழிலாளர்கள் கட்டட வேலைக்கு சென்ற போது பழைய வீட்டின் ஒரு அறையில் ஒரு மூட்டையில் கட்டுக்கட்டாய் பணம் இருந்துள்ளது. அதை பார்த்த தொழிலாளர்கள் அதிலிருந்து சிறிதளவு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சிறிதளவு பணம் மட்டும் காணாமல் போகவே அப்பொழுது பணம் குறைந்தது துரைசாமிக்கு தெரியவில்லை.

பணம் குறைந்ததால் அதிர்ச்சி: மீண்டும் இரண்டாவது முறை அதேபோல் கட்டட வேலைக்கு சென்ற போது, அதிலிருந்து கொஞ்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மூன்றாவது முறையாக ஜனவரி மாதமும் அதிலிருந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். ஒரு நாள் அந்த அறைக்கு சென்ற துரைசாமி பணம் குறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் இரண்டு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

திருப்பூரில் கருப்பு பணம் கொள்ளை
திருப்பூரில் கருப்பு பணம் கொள்ளை

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அங்கு கட்டட வேலைக்கு வந்த நபர்கள் மீது சந்தேகம் எழவே, அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் அவர்கள் மூன்று முறை பணம் கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்தது. அதன் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளனர். கொள்ளை அடித்த பணத்தில், மூன்று மாதங்களாக திருப்பூர், திருவண்ணாமலையில் ஜாலியாக செலவு செய்து, சொகுசு வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

கொள்ளை பணத்தில் வீடு: சகோதரர்கள் சதீஷ், சக்தி ஆகியோர் திருவண்ணாமலையில், புதிய கார், புல்லட் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு பேரும், வீரபாண்டி, கணபதிபாளையம், மங்கலம் ரோடு ஆகிய இடங்களில், ஆளுக்கொரு வீடுகளை, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கியுள்ளனர். காவல்துறையினரிடம் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து தற்போது 30 சவரன் நகை 16 லட்ச ரூபாய் பணம் சொத்து ஆவணங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் தன் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் துரைசாமியிடம் வருமானவரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கூட்டு பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை- மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.