ஆள் கடத்தல் விவகாரம் - மேலும் நான்கு பேர் கைது

author img

By

Published : Aug 31, 2021, 12:47 AM IST

ஆள் கடத்தல் விவகாரம்

திருப்பூரில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட மூவரை கடத்திய கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர்: பல்லடத்தில் தங்ககட்டி பதுக்கிய விவகாரத்தில் கடந்த 26ஆம் தேதி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சக்தி என்ற மகேஸ்வரன், சிவகங்கையைச் சேர்ந்த வீரமணிகண்டன், அழகர்சாமி ஆகிய மூவரும் ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட எஸ்பி சசாங்சாய் உத்தரவின் அடிப்படையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவே கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள், கடத்தல் கும்பலைச் சேர்ந்த முகமது ரிஸ்வான், யாசர் அராபத், கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர் ராஜேஷ்வரன் ஆகியோரை நேற்று (ஆக.30) கைது செய்தனர்.

மேலும் நான்கு பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவையைச் சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கார்த்தி, திருவாடானையைச் சேர்ந்த சல்மான் (44), புதுக்கோட்டையைச் சேர்ந்த சற்குணம் (48), ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரகு (31) உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை நேற்று (ஆக.30) மாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுவரை இந்த கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு, சைலோ, ஆடி, பி.எம்.டபுல்யூ உள்பட மூன்று சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் திருப்பூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தங்ககட்டி பதுக்கல் விவகாரம், ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

காவலர் ராஜேஷ்வரன், முன்னாள் காவலர் கார்த்திக் இருவரும் கோவை போத்தனூரில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்க கடத்தல் விவகாரம் - மூவரை கடத்திய கும்பல் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.