தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சாட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவதாக வழக்கறிஞர் தகவல்

author img

By

Published : Sep 19, 2021, 10:29 AM IST

Tuticorin massacre

ஒருநபர் ஆணையத்தின் விசாரணைக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சாட்சிகள் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு, தடியடியை தொடர்ந்து 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணைய அலுவலர்கள் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஏற்கனவே 29 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 938 சாட்சிகளிடம் வாக்குமூலம் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 30ஆம் கட்ட விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கியது. இதில் 2018 மே 22ஆம் தேதி துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி, ஸ்டெர்லைட் தாமிரா-2 குடியிருப்பில் தங்கியிருந்த ஸ்டெர்லைட் பணியாளர்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உள்பட 121 பேருக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

விபத்து வழக்கு: தலைமைக் காவலரை தாக்கும் சிசிடிவி காட்சி!

இதுகுறித்து விசாரணையின் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "30ஆவது கட்ட விசாரணைக்காக 121 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 75 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

இதில் 53 பேர் ஸ்டெர்லைட் தாமிரா குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்தவர்கள். இவர்கள் அணைவரும், இந்தியாவின் கோவா, குஜராத், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஒரிசா, மும்பை, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து சாட்சியம் அளிக்க வந்திருந்தனர்.

எஞ்சிய 22 பேர் அன்றைய தினம் ஸ்டெர்லைட் குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆணைய தரப்பிலிருந்து இதுவரை மொத்தம் 1330 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 938 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 1231 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் பேட்டி

ஒருநபர் ஆணையத்தின் 30ஆவது கட்ட விசாரணை அடுத்த வாரமும் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது‌. இதில் காவலர்கள் விசாரிக்கப்பட உள்ளனர். ஒரு நபர் ஆணையத்தின் மூலமாக கலவரத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் காயம்பட்ட அனைவருக்கும் இழப்பீடு, நிவாரணம் பெற்றுத் தருவதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

சிலம்பத்திற்கு அங்கீகாரம்; தமிழினத்திற்கு பெருமை - நிறைவேறிய முதலமைச்சரின் முயற்சி

அதை பரிசீலித்து ஏற்றுக்கொள்வது அரசின் கையில் மட்டுமே உள்ளது. ஆணையத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணைக்கு சாட்சிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.