பயணிக்கு சில்லறை கொடுக்காத பேருந்து நடத்துநர் - போக்குவரத்துக் கழகத்திற்கு அபராதம்

author img

By

Published : Sep 22, 2021, 7:44 PM IST

பயணிக்கு சில்லரை கொடுக்காத பேருந்து நடத்துநர்

அரசுப் பேருந்தில் சென்ற பயணிக்கு சில்லறை கொடுக்காத நடத்துநர் தொடர்பான விவகாரத்தில் முறையான பதிலளிக்காத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாநில தகவல் ஆணையம் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தூத்துக்குடி: கோவில்பட்டி கதிரேசன்கோவில் சாலையைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மசாலா பொருள்கள் விநியோகிஸ்தராக பணிசெய்து வருகிறார். ஜெயப்பிரகாஷ் தனது வேலை நிமர்த்தமாக கடந்த 2018ஆம் ஆண்டு மதுரைக்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கோவில்பட்டி வர அரசு பேருந்தில் பயணித்தார்.

பேருந்து கிளம்பி சிறிது தூரம் சென்றதும் டிக்கெட் எடுப்பதற்காக ஜெயப்பிரகாஷ், நடத்துநரிடம் 500 ரூபாயை கொடுத்துள்ளார். அதனைக் கண்ட நடத்துநர் “சில்லறை இல்லை பேருந்தை விட்டு கீழ இறங்கு” எனக் கூறியுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளாலும் பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரகாஷ், “இரவு நேரம் என்பதால் பாதி வழியில் இறங்க முடியாது. திருமங்கலம் வந்ததும் அங்குள்ள கடைகளில் சில்லைறை மாற்றித் தருகிறேன்” எனக் கூறியுள்ளார். திருமங்கலத்தில் பேருந்து நிற்காது என்று கூறியவாறு நடத்துநர் சென்றுவிட்டதாக தெரிகிறது.

சில்லரை தராத நடத்துநர்

ஆனால், திருமங்கலத்தில் 10 நிமிடங்கள் பேருந்து நின்றுள்ளது. இந்நிலையில், ஜெயப்பிரகாஷ், இங்குள்ள கடைகளில் சில்லறை மாற்றித் தருகிறேன் தான் கொடுத்த 500 ரூபாயை கொடுங்கள் என நடத்துநரிடம் கேட்டுள்ளார். ஆனால் நடத்துநர் டிக்கெட் மட்டும் கொடுத்துவிட்டு 500 ரூபாயையும் தரவில்லை, டிக்கெட் பணம் போக மீதி சில்லறையும் தரவில்லை.

பின்னர் கோவில்பட்டியில் பேருந்து வந்து நின்றதும், ஜெயப்பிரகாஷ் நடத்துநரிடம் மீதி பணத்தினைக் கேட்டபோது, மதுரை புதுக்குளத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெயப்பிரகாஷ், இது தொடர்பாக மதுரையிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் புகார் அளித்தார்.

அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு அபராதம்

ஆனால் இவருடைய புகாரை அவர் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. மேலும், தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டும் சரியான பதில் இல்லை என்பதால் ஜெயப்பிரகாஷ் , தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் தமிழ்க்குமார் முன்னிலையில் தொலைபேசி வழியாக இருதரப்பினர் இடையே விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட ஜெயப்பிரகாஷின் மனுவிற்கு இரண்டு ஆண்டுகளாக தகவல் வழங்காமல், மன உளைச்சல், பொருள் விரயத்தினை ஏற்படுத்தியதற்காக மதுரை அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டது.

மாநில தகவல் ஆணையம் விசாரணை

மேலும், ஏழு நாள்களுக்குள் ஜெயப்பிரகாஷ் கேட்ட தகவல்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையில் விசாரணை தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ்க்கு தர வேண்டிய மீதிதொகையாக 402 ரூபாயை மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகம் காசோலை அனுப்பியுள்ளது. இது குறித்தும் ஜெயப்பிராகஷ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த ஜெயப்பிரகாஷ்
அரசுப் பேருந்தில் பயணித்த ஜெயப்பிரகாஷ்

பேருந்தில் பலர் இருந்தபோது தன்னை அவதூறாக பேசியது தனக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்தியதாகவும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளாக போராடி வருவதாகவும், தனக்கு பணம் என்பது முக்கியம் கிடையாது எனவும் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்தைச் சிறைப்பிடித்து பழங்குடியின மக்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.