குவாரிகளைத்திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்; போலீஸ் குவிப்பு - நெல்லையில் பதற்றம்!

author img

By

Published : Aug 1, 2022, 3:19 PM IST

Updated : Aug 1, 2022, 5:24 PM IST

Stone Quarries Labor unions protest

திருநெல்வேலியில் விதிகளை மீறியதால் மூடப்பட்டுள்ள குவாரிகளை திறக்கக்கோரி, அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று (ஆக. 1) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், போராட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கல்குவாரி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகளில் சிறப்பு குழு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், மொத்தம் உள்ள 55 குவாரிகளில் ஒரு குவாரியைத்தவிர அனைத்து குவாரிகளும் விதிமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

ரூ.300 கோடி வரை அபராதம்: எனவே, விதிமீறிய 13 குவாரிகளை ஏன் மூடக்கூடாது என குவாரி உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சம்மன் அனுப்பினார். மீதமுள்ள 41 குவாரிகளுக்கு 300 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது. ஆனால், குவாரி உரிமையாளர்கள் அபாரதம் செலுத்த விரும்பாமல் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

வழக்கு நிலுவையில் இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் குவாரிகளின் செயல்பாடு முடங்கியுள்ளது. இதற்கிடையில் குவாரிகள் மூடப்பட்டிருப்பதால் கட்டுமானப்பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும், குவாரியை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

1000 பேர் போராட்டம்: எனவே, குவாரிகளை உடனே திறக்க வேண்டும் என கட்டுமானத்தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், குவாரிகளை திறக்கக்கோரி நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று (ஆக. 1) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குவாரிகளைத்திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்; போலீஸ் குவிப்பு - நெல்லையில் பதற்றம்!

இதில், ராதாபுரம், வள்ளியூர், திசையன்விளை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் குவாரியைத் திறக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதையொட்டி துணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்: போராட்டம் குறித்து கட்டுமானத்தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் மகாலிங்கம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நெல்லை மாவட்டத்தில் கட்டுமானத்தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கல், ஜல்லி, குண்கு கற்கள், செங்கல்கள் கிடைக்கவில்லை. மொத்தம் 5 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர்.

தொழில் முடங்கி கிடக்கிறது. எனவே, இதை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்லவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவுக்குப்போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் விதிகளை மீறிய குவாரிகள் அபராதம் செலுத்தினால் அனுமதி அளிக்க அரசு தயார் - டி.ஆர்.பி.ராஜா

Last Updated :Aug 1, 2022, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.