பொதுத்துறை நிறுவனத்தின் நீண்ட பயணம்: சேலம் உருக்காலையின் கதை!

author img

By

Published : Sep 16, 2021, 1:00 PM IST

Updated : Sep 16, 2021, 8:01 PM IST

சேலம் உருக்காலை

சேலம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் இடங்களில் சேலம் உருக்காலையும் ஒன்று. 1970ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டிய தினம் இன்று. இதன் வரலாற்றுப் பின்னணி குறித்தும் கடந்து வந்த பாதையும் குறித்து இங்கு காண்போம்.

சேலம் உருக்காலை, சேலம் - பெங்களூர் நெடுஞ்சாலையில் கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலை ஒரு ஆண்டுக்கு ஆறு லட்சத்து 10 ஆயிரம் டன் எஃகை தயார் செய்கிறது. இது இந்தியா முழுவதும், குறிப்பாக 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1970ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி இதே நாளில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு, உருக்காலைப் பணிகள் 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இருவகை எஃகு தயாரிப்பு

எஃகு துரு பிடிக்காமல் இருக்கவும், உடையாமல் இருக்கவும் அதை உருக்கி, அதன் பின்னர் விநியோகிக்கப்படுகிறது. இது 'ஹாட் ரோல்டு ஸ்டேன்லேஸ் ஸ்டீல்' (Hot rolled stainless steel) என்றும், வெப்பம் தணிந்த பின் அறை வெப்பச் சூழ்நிலையில் தயாரிக்கப்படும் எஃகு 'கோல்டு ரோல்டு ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்' (Cold rolled stainless steel) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு முறைகளிலும் சேலம் உருக்காலையில் எஃகு தயார் செய்யப்படுகிறது.

சேலம் உருக்காலையின் கதை

மொத்தம் 1,357 பணியாளர்களைக் கொண்டு இயங்கும் உருக்காலையின் கட்டுமானப் பணிகளின் ஆரம்பக்கட்ட செலவுகள் மட்டும், சுமார் 181.19 கோடி ரூபாய். அதன் கட்டுமானப் பணிகள் 1972ஆம் ஆண்டு அப்போதைய எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தால் தொடங்கப்பட்டது.

தடைகளைத் தகர்த்து நீளூம் பயணம்...

பாரத மிகுமின் நிறுவனம், எச்எம்டி, பாரத் எலக்ட்ரானிக், இந்தியத் தொலைபேசி நிறுவனம் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு எஃகு, சேலம் உருக்காலையில் இருந்தே வழங்கப்படுகிறது.

ஐஎஸ்ஓ நிறுவன சான்றிதழுடன் இயங்கும் சேலம் உருக்காலை 1994-95 ஆகிய ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் டன் எஃகை 27 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

salem steel plant, salem steel
சேலம் உருக்காலை பராமரிக்கும் பூங்கா

ஒரு பக்கம் இதன் பணியாளர்களுக்கு தங்கும் விடுதிகள், பூங்காக்கள், திருமண மண்டபங்கள் என அனைத்து வசதிகளும் இருந்தும், தனியார்மயமாக்கல் என்ற மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது சேலம் உருக்காலை.

ஆனால், வரலாற்றுப் பின்னணியுடன் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ள சேலம் இரும்பாலை, இந்தத் தடையையும் தாண்டி வரும் என அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க: சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதன் பின்னணி என்ன?

Last Updated :Sep 16, 2021, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.