எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கல்லை கூட திமுக எடுத்து வைக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்

author img

By

Published : Sep 10, 2022, 7:30 PM IST

Etv Bharat

செங்கல்லைக் காட்டி, மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுகவினர் தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை: திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்க டேராபாறையில் அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் இன்று (செப்.10) வழங்கினார்.

கிடப்பில் மதுரை எய்ம்ஸ்: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'செங்கலைக் காட்டி, மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக; தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்கவில்லை. எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் போட்ட கல்லாக உள்ளது. கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசு பரிந்துரை செய்யவேண்டும்.

அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகை திட்டத்தில் 37 லட்சம் முதியோருக்கு ரூ.4300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டது. முதியோர் உதவி தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்குவதாக, தேர்தல் நேரத்தில் அறிவித்த திமுக தற்பொழுது முதியோர் உதவித்தொகையை ரத்து செய்து வருவது வேதனை அளிக்கிறது.

விழா நாயகரே புள்ளி விவரம் தருவீர்களா? மதுரை வளர்ச்சிக்காக, திமுக அரசு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மக்களை உண்மையாக நேசிப்பவராக இருந்தால், வரும் செப்.15 ஆம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் மதுரைக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும். முதலமைச்சர் விழா நாயகனாக உள்ளார். ஆனால், விழாவில் பங்கேற்கும் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை.

கருணாநிதி நூலகம்போல எய்ம்ஸ் முக்கியம் இல்லையா? மதுரையில் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் நூலகத்திற்கு பல முறை வருகை புரிந்த முதலமைச்சர், எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை ஒருமுறை கூட பார்வையிடவில்லை. தமிழகத்தை வலம் வரும் முதலமைச்சரால் சாமானிய மக்களின் வாழ்வை வளப்படுத்த இயலவில்லை என்பதே நிதர்சனம்.

ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி

முதலமைச்சர் ஏளனம் செய்வது எடப்பாடி பழனிச்சாமியை அல்ல; அதிமுகவிற்கு வாக்களித்த மக்களை ஏளனம் செய்வதுபோல் உள்ளது. அவர், எதிர்க்கட்சியையும் எதிர்க்கட்சி தலைவரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியை மதிக்காதவர் எப்படி மக்களை மதிப்பார்' என்றார்.

இதையும் படிங்க: அனைத்து ஆதிதிராவிட, பழங்குடி நல பள்ளிகளும் விரைவில் சீரமைக்கப்படும் - அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.