ETV Bharat / city

பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி கோரி மனு - தேனி ஆட்சியர் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Oct 27, 2021, 10:31 PM IST

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொடி கம்பம் வைக்க அனுமதிக்கக் கோரிய மனுவை தேனி மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி கோரி மனு
பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி கோரி மனு

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மோடி கார்த்திக் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "பல கட்சிக் கொடி கம்பங்கள் உள்ள பகுதியில் 12அடி உயரம் கொண்ட பாஜகவின் கொடி கம்பத்தை ஒரு சிமெண்ட் திட்டு அமைத்து நட்டுவைத்தேன்.

ஆனால், அந்த சிமெண்ட் திட்டை செப்.16ஆம் தேதி இரவு 10 மணியளவில் காவல் துறையினர் இடித்து அப்புறப்படுத்தி விட்டனர்.

அந்த இடத்தில் மற்ற கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. அவர்களின் கொடி கம்பம் இருக்க பாஜக கொடியை ஏற்றக் கூடாது என காவல் துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலுள்ள தேரடி, பைபாஸ், கிராமச்சாவடி, அம்மாபட்டி விலக்கு ஆகிய பகுதிகளில் பாஜக கொடி கம்பம் நட அனுமதியளித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

வழக்கை முடித்து வைத்த நீதிபதி

இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி, ஏற்கனவே அனுமதி பெறாமல் கொடி கம்பம் வைத்த காரணத்தால் கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது. அனுமதி பெறாத பிற கட்சிகளின் கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன.

ஆகவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில், கொடிமரம் வைக்க அனுமதிக்கக் கோரி மனுதாரர் முறையாக விண்ணப்பிக்கவும், தேனி மாவட்ட ஆட்சியர் மனுதாரரின் மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.