ETV Bharat / city

மதுரை ரயில்வே பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

author img

By

Published : Sep 5, 2021, 8:38 AM IST

மதுரையில் உள்ள ரயில்வே காலனியில் செயல்பட்டு வரும் ரயில்வே பள்ளி சிறந்த பள்ளியாக தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்டு, அப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Madurai school
Madurai school

மதுரையில் உள்ள ரயில்வே காலனியில் செயல்பட்டு வரும் ரயில்வே பள்ளியை சிறந்த பள்ளியாக தெற்கு ரயில்வே அறிவித்து விருது வழங்கியுள்ளது. இப்பள்ளியில் தலைமையாசிரியை மாயா பத்மநாபனும் சிறப்பு விருது பெற்றுள்ளார்.

தெற்கு ரயில்வே சார்பாக ரயில்வே குடியிருப்புகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தெற்கு ரயில்வேயில் பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, விழுப்புரம், திருச்சி பொன்மலை, ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களில் ரயில்வே பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மதுரை ரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி 2019-20 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

128 ஆண்டு பழமையான பள்ளி

மதுரை இருபாலர் மேல்நிலைப்பள்ளி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1894ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 128 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வரும் மதுரை ரயில்வே பள்ளி தற்பொழுது சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்திலிருந்து ஆங்கிலோ-இந்தியர்களுக்கான ஆங்கிலோ இந்திய பள்ளியாக இயங்கி வந்த இந்த பள்ளி பிற்காலத்தில் பொது பாடப்பிரிவு முறைக்கு மாற்றப்பட்டது.

இந்த பள்ளி 2018 - 19ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி கண்ட பள்ளியாகும். கரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து 10ஆம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி என சாதனை புரிந்துள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியை மாயா பத்மநாபனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியைக்கும் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கோட்ட ரயில்வே மேலாளர் ப.அனந்த் மற்றும் பள்ளி தாளாளரும், கோட்ட முதுநிலை ஊழியர் நல அதிகாரியுமான சி.சுதாகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

போத்தனூர் ரயில்வே பள்ளி ஆசிரியை கே. பத்மா, திருச்சி பொன்மலை பள்ளி ஆசிரியை டி. கலையரசி மற்றும் பாலக்காடு பள்ளி ஆசிரியர் சனூப் ஆகியோருக்கும் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.