ETV Bharat / city

மதுரை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

author img

By

Published : Mar 2, 2021, 3:51 PM IST

Updated : Mar 14, 2021, 4:56 PM IST

சங்க காலம் தொடங்கி இந்த காலம்வரை தனக்கென தனித்த அரசியல் பாரம்பரியம் கொண்ட நகரம் மதுரை. தனி பாணியை தகவமைத்துக் கொண்டாலும் காலத்தின் மாற்றங்களை உள்வாங்குவதிலும் மதுரையே முன்மாதிரி. பாண்டியர்கள் தொடங்கி பிரிட்டிஷார் வரை தமிழ்நாட்டின் தென் பகுதி முழுவதும் விரிந்திருந்த இந்த நகரம், பல்வேறு மாவட்டங்களாகப் பிரிந்து இன்று, மேற்கே தேனி, கிழக்கே சிவகங்கை, வடக்கே திண்டுக்கல், தெற்கே விருதுநகர் மாவட்டங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. விவசாயம் தவிர்த்து, ரசாயனம், கிரானைட் தொழில்களும் இங்கு பிரதானமாகத் திகழ்கின்றன.

மதுரை தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!
தேர்தல் உலா 2021: மதுரை மாவட்டத்தின் எதிர்பார்ப்பும் களநிலவரமும்...

வாசல்:

தமிழ்நாட்டின் தென்பகுதிகளை இணைக்கும் முக்கிய நகரமாக இருக்கும் மதுரை எப்போதும் பரபரப்பாகவே இருந்துவருகிறது. இந்த தூங்கா நகரத்தில், மதுரை தெற்கு, மத்திய மதுரை, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பொது தொகுதிகளும், தனி தொகுதியாக சோழவந்தானும் உள்ளன.

தொகுதிகள் வலம்:

உசிலம்பட்டி:

மதுரையை ஊர் மணக்க செய்யும் மல்லிகைப்பூ சாகுபடி, உசிலம்பட்டி தொகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் பெருமளவு நடைபெறுகிறது. உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியின் 40 ஆண்டு காலக்கோரிக்கையான 58 கிராம கால்வாய்த் திட்டப்பணிகள் அதிமுக அரசின் முயற்சி காரணமாக நிறைவடைந்தாலும், அதில் முழுமையான பயன் கிடைக்கவில்லை என்பதும், பெண்களுக்கான கல்வி வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளது என்பதும் அப்பகுதியில் நிலவும் குற்றச்சாட்டாக உள்ளது.

சேடபட்டி பகுதியில் அமையும் என அறிவிக்கப்பட்டிருந்த தொழிற்பேட்டை குறித்த எதிர்பார்ப்பு இன்றும் நீடிக்கிறது. அதற்கான எந்தப் பணியையும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி செய்யாதது அப்பகுதி மக்களிடம் வேதனையாக உள்ளது.

திருமங்கலம்:

புராணங்களின்படி மீனாட்சியின் திருமணத்திற்காக தாலி செய்ய தேர்வு செய்யப்பட்ட இடமென்பதால், இவ்வூர் திருமங்கலம். இத்தொகுதியில் அமைக்கப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்பட அதிமுக அழுத்தம் கொடுக்கவேண்டுமென்பது, தொகுதிவாசிகளின் விருப்பம். வைகையிலிருந்து பெறப்படும் நீர், திருமங்கலம் பிரதானக் கால்வாயில் விவசாயத்திற்காக வந்து சேர்வதற்கு, நீர்வரத்துக் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும், புதிய பேருந்து நிலையம், ரயில்வே மேம்பாலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதும் தொகுதிவாசிகளின் கோரிக்கை ஆகும். சிவரக்கோட்டை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வந்த விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து அரசாணை பிறப்பிக்க உதவிய உள்ளூர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை விவசாயிகள் பாராட்டுகின்றனர்.

சோழவந்தான் (தனி):

வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள நகரம் சோழவந்தான். வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு முதலியன சோழவந்தான் தொகுதியில் பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. கண்மாய், குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் முறையாகத் தூர்வாரப்படாததும், விவசாயம் தவிர்த்து, ஆண்டு முழுவதும் வேறு வேலை வாய்ப்பின்மை நிலவுவதும், போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லாததும் சோழவந்தான் தொகுதியின் சோகங்களாக இன்னும் தொடர்கின்றன.

திருப்பரங்குன்றம்:

மதுரை தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்..!

முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தின் சரவணப்பொய்கை தூர்வாரப்பட வேண்டும்; கிரிவலப்பாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இத்தொகுதியின் பெரும்பாலான கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. நிலையூர் பகுதியில் நடைபெறும் கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்க சரியான விற்பனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். மல்லிகை, பருத்தி உற்பத்தியில் சிறந்து விளங்கும் இத்தொகுதியில், அது தொடர்பான தொழில் வாய்ப்புகள், பண்டகசாலை வசதிகள் இல்லாதது பெருங்குறையாக உள்ளன.

மேலூர் :

மேலூர் தொகுதியில் முல்லைப் பெரியாறு நீரே விவசாயத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறது. கொட்டாம்பட்டி பகுதியில் போதுமான உயர் கல்வி நிலையங்கள் இல்லாததால் ஆர்வமிருந்தும் பெண் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் சிரமப்படுகின்றனர் . சலவைக்கற்கள் எடுப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த தொகுதியிலும் வேலைவாய்ப்பின்மை பெரும்பிரச்னையாக உள்ளது.

மதுரை மேற்கு:

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் செந்த தொகுதி இது. செல்லூர் பகுதியில் நெடுங்காலமாக இருந்து வந்த நெசவுத் தொழிலை மீட்டெடுத்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஊமச்சிக்குளம் பகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைத்தல், சிக்கந்தர்சாவடி சாலைகளை சரி செய்தல், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அப்பள உற்பத்தியை மேம்படுத்துதல், நீர் ஆதார மேம்பாடு ஆகியவற்றுடன் தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இத்தொகுதி மக்கள் தங்களின் தேவையாக முன்வைக்கின்றனர்.

மதுரை (மத்தி):

மதுரை மத்தியத் தொகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் சரிவர திட்டமிட்டு செயல்படுத்தாததால், மிக அதிகளவு நெருக்கடி ஏற்படுகிறது. மதுரை மத்தியத் தொகுதியில், மீனாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளதால், அங்கு வரும் கார்களுக்கு, பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மதுரை மத்தியத் தொகுதியில் திமுகவின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏவாக உள்ளார்.

மதுரை கிழக்கு:

மதுரை கிழக்குத் தொகுதியில் பெண்களுக்குப் போதுமான கழிவறைகள் இல்லை எனவும்; இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் ஆன்லைன்களில் படிப்பதற்கு ஏற்ற போதுமான செல்போன்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுரை தெற்கு:

இத்தொகுதியில் பெருமளவு வசிக்கும் செளராஷ்டிரா மொழி பேசும் மக்கள், தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர். அதேபோல், பாலரங்காபுரம் அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை எனவும்; ஈஎஸ்ஐ கிளை மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை எனவும், அதனை உடனடி ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

மதுரை வடக்கு:

இத்தொகுதியில் நலிவடைந்த நிலையில் இருந்த கைத்தறித் தொழிலை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் எனவும்; போதிய கல்லூரி வசதி இல்லாததால், படிப்பிற்காக இடம் பெயர்ந்து போகும் சூழல் நிலவுகிறது எனவும், அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். அதேபோல், பேருந்து வசதியை அதிகப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

கள நிலவரம்:

வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள், உயர் கல்விக்கான வாய்ப்புகள் ஆகியவையே மதுரை மாவட்டத்திலுள்ள பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் முன்வைக்கும் பெரும்பான்மையான கோரிக்கைகளாக உள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏக்களும், மூன்று திமுக எம்.எல்.ஏக்களும் தற்போது பதவி வகித்து வருகின்றனர். தென்மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் வெற்றிகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் சாதி அரசியலுக்கு மதுரை மாவட்டமும் விதிவிலக்கில்லை என்பது கடந்த கால அரசியல் வரலாறு. அதிமுகவிற்கு அடித்தளமிட்ட மதுரை மாவட்டம், இங்கு தொடர்ந்து நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை, அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்தாமை போன்ற காரணிகளால் இந்த நிலைப்பாட்டை இழக்கலாம் என்கிறது களநிலவரம். மூன்று தொகுதிகளில் மட்டுமே ஆளுங்கட்சிக்கான ஆதரவு இருந்து வருகிறது. இந்த முறை மக்கள் திமுகவிற்கு ஆதரவு தரும் மனநிலையிலேயே மதுரையில் உள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தல் உலா - 2021: கோயம்புத்தூர் எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

Last Updated :Mar 14, 2021, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.