சவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றியது உயர் நீதிமன்றக்கிளை

author img

By

Published : Aug 4, 2022, 6:00 PM IST

Etv Bharatசவுக்கு சங்கருக்கு எதிராக சாட்டையை சுழற்றியது உயர் நீதிமன்றம் மதுரை கிளை

‘சவுக்கு சங்கர் தனிநபர் மற்றும் நீதித்துறையை கடுமையாகத்தாக்கிப்பேசுகிறார்’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரை: ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குற்றவியல் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒரு தனியார் யூ-ட்யூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான அவரது உத்தரவில், ‘ சவுக்கு சங்கர் என்பவர் ஊடகத்துறையில் உள்ளவர், விமர்சகர். தனிநபர்கள் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவைகளை கடுமையாகத் தாக்கி செயல்படுகிறார். அவர் கடந்த சில மாதங்களாக என் மீதும் எனது தீர்ப்புகள் குறித்தும் உண்மைக்குப்புறம்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதாவது யூ-ட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை உரிய முறையில் விசாரித்து அவர் மீதான 2 வழக்குகளை ரத்துசெய்தேன். இதை சவுக்கு சங்கர் மோசமான வார்த்தைகளில் கண்டித்திருந்தார். எனது தீர்ப்புகள் குறித்து கருத்துதெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு. அவரது புண்படுத்தும் கருத்துகள் மூலம் எனது நேர்மையை கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடுகிறேன்’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி‌.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ’சவுக்கு சங்கருக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது’ எனக்கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், மாதம் 43 ஆயிரம் வீதம் 13ஆண்டுகளாக தற்போது வரை தோராயமாக 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு தொகை வழங்கியுள்ளீர்களா? எனக்கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏற்கெனவே சவுக்கு சங்கர் என்பவர் மீது கடந்த மாதம் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருந்தது. இது குறித்து அவருக்க நோட்டீஸும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு Youtube சேனலில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்‌‌. எனவே இவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படுகிறது எனக் கூறி, இதுகுறித்து சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.