37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்பு!

author img

By

Published : Jun 17, 2022, 9:55 PM IST

idols

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கோவிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மதுரை: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறைத்தலைவர் தினகரன் ஆகியோர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெயந்த் முரளி, "கடந்த 1985ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள நரசிங்கநாதர் கோயிலில் இருந்து 11ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் காணாமல் போயுள்ளன.

இந்த சிலைகளை மீட்க முடியாமல் 1986ஆம் ஆண்டு உள்ளூர் காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்த நிலையில், இந்த இரண்டு சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய்.

யார் கடத்தியது? எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. சிலைகள் பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன.

இன்னும் 40-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட வேண்டும். மதுரையிலுள்ள மரகதலிங்கம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்த கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருவதில் பல்வேறு நீண்ட நெடிய நடைமுறைகள் உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் உள்ள விலை உயர்ந்த மதிப்புமிக்க சிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

சிலைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு அச்சுறுத்தல்களோ மிரட்டல்களோ எதுவும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு சிலையை மீட்கவும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலைகள் காணாமல் போன வழக்கின் விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிலைகள் கடத்தல் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட சுபாஷ் கபூர் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார்" எனத் தெரிவித்தார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளி பேட்டி

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட இரண்டு ஐம்பொன் சிலைகளையும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, காவல் துறை தலைவர் தினகரன் , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கோவில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: பட்டாபிராம் முத்துமாரியம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - துரிதமாக மீட்ட காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.