திடக்கழிவு மேலாண்மையில் அசத்தும் குருடம்பாளையம் ஊராட்சி

author img

By

Published : May 12, 2022, 7:48 PM IST

திடக்கழிவு மேலாண்மையில் அசத்தும் குருடம்பாளையம் ஊராட்சி

கோயம்புத்தூர் அருகே திடக்கழிவு மேலாண்மையில் அசத்தி வரும் குருடம்பாளையம் ஊராட்சி, தேசிய மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை பெற்றது எப்படி என்பது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கோயம்புத்தூர்: துடியலூர் அருகே உள்ளது குருடம்பாளையம் ஊராட்சி. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 40,000 குடும்பங்கள் உள்ளன. மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 10 டன் குப்பைகளை பயனுள்ளதாக மாற்றுகின்றது குருடம்பாளையம் ஊராட்சி. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ரவி கூறுகையில், "கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறேன். நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து, தொடர்ந்து ஊராட்சி முழுவதும் சோலார் மின் விளக்குகள் அமைத்து பல்வேறு விருதுகளை பெற்று உள்ளேன்.

திடக்கழிவு மேலாண்மையில் அசத்தும் குருடம்பாளையம் ஊராட்சி

ஊராட்சி மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்து வருகிறேன். மக்கள் அளித்த இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். தற்போது ஊராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கி வருகின்றனர்.

மக்கும் குப்பைகள் ஒரு இடத்திலும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மற்றொரு இடத்திலும் பிடிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தயார் செய்யப்படுகிறது. மக்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரித்து அதனை விவசாயத்திற்கு வழங்கி வருகிறோம்.

பாதாள சாக்கடை திட்டம் தங்களது ஊராட்சியில் முதன்முதலாக செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடைமுறை படுத்தப்படுகிறது. விரைவில் ஊராட்சிக்கு தேவையான மின்சாரத்தை தயாரிக்க உள்ளோம்" என்றார். திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வை செய்து வரும் வினோத் கூறுகையில், "மக்கும் குப்பைகளுடன் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அதனை அரைத்து உரமாக மாற்றி விவசாயிகளுக்கு மலிவு விலையில் கொடுத்து வருகிறோம்.

இதுதவிர காய்கறி கழிவுகளை மாடுகளுக்கும் கோழிகளுக்கும் கொடுத்து வருகிறோம். மண் புழு உரம் விவசாயிகளுக்கு வழங்கி வருவதால் இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனை விரிவுபடுத்த உள்ளோம். பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து மறுசுழற்சி செய்து வருகிறோம். மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை தார் சாலை அமைக்க பயன்படுத்தி வருகிறோம்" என்றார்.

திடக்கழிவு மேலாண்மைக்காக தேசிய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் பெற்றுள்ளது குருடம்பாளையம் ஊராட்சி. மற்ற ஊராட்சிகளுக்கு மட்டுமல்ல மாநகராட்சி, நகராட்சிக்கு முன்னுதாரணமாக திடக்கழிவு மேலாண்மையில் குருடம்பாளையம் ஊராட்சி சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேளாண்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளை இந்த அரசு அனுமதிக்காது - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.