ETV Bharat / city

அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய யாஷிகா

author img

By

Published : Jul 29, 2021, 8:48 AM IST

நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது முதல் தகவல் அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.

yashika anand accident case fir
yashika anand accident case fir

சென்னை: ஈசிஆர் சாலையில் தனது நண்பர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்த் காரில் வேகமாக சென்ற போது நிலைதடுமாறி சாலையின் தடுப்பின் மீது மோதி கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவரின் தோழி ஹைதரபாத்தைச் சேர்ந்த வள்ளி ஷெட்டி பவானி(27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நடிகை யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இரண்டு பேர் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக காரை ஓட்டி வந்தது யார்? குடிபோதையில் வாகனத்தை இயக்கினாரா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நடிகை யாஷிகா விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆழ்வார் திருநகரை சேர்ந்தவரும், யாஷிகாவின் ஆண் நண்பருமான நிரூப் நந்தகுமார் அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த 24ஆம் தேதி யாஷிகா ஆனந்த் தனது காரில் ஹைதரபாத்தைச் சேர்ந்த பாவணி மற்றும் சென்னையைச் சேர்ந்த அமீர், சையது ஆகியோருடன் மகாபலிபுரத்தில் உள்ள உணவகத்திற்குச் சென்று உணவு உண்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் இரவு 11 மணியளவில் யாஷிகா ஆனந்த் காரை ஓட்டியதாகவும், அப்போது அருகே இருக்கையில் பவானி மற்றும் ஆண் நண்பர்கள் இருவரும் பின்புற சீட்டில் அமர்ந்து சென்னை நோக்கி வந்துள்ளனர். ஈசிஆர் சூளேரிகாடு பேருந்து நிலையம் அருகே வேகமாக வந்த போது நிலைதடுமாறி தடுப்பு சுவரின் மீது கார் மோதி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த பவானியை அருகிலிருந்த பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும், காயமடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் ஆண் நண்பர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் காரை ஓட்டி சென்ற யாஷிகா ஆனந்த் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்குதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், மரணத்தை விளைவிக்கும் குற்றம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வாகன ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் விபத்து குறித்து யாஷிகா ஆனந்திடம் விசாரணை நடத்தவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.