மின்வாரிய தலைவரை மாற்றக்கோரி மின் வாரிய ஊழியர்கள் போராட்டம்

author img

By

Published : Feb 8, 2021, 9:06 PM IST

tneb workers protest

சென்னை: தொழிற்சங்கங்களுக்கு விரோதமாக செயல்படும் மின்வாரியத் தலைவர் பங்கஜ் குமார் பன்சால்-ஐ மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்து சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாள்களுக்கு முன், மின்வாரிய தொழிற்சங்கங்களுக்கு பங்கஜ் குமார் பன்சால் நோட்டீஸ் அளித்தார். அதில், கடந்த நவம்பர் மாதம் ஊழியர்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தார். மின்துறை அமைச்சரின் முடிவை கூட மதிக்காமல் இருக்கும் சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மின்வாரியத் தலைவரையும், இணை மேலாண்மை இயக்குநரையும் இடமாற்றம் செய்யக்கோரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின் பிரிவு அலுவலங்கள், செயற்பொறியாளர் அலுவலகங்கள், வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அப்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களையும், இதர பகிர்மான பணிகளையும் (இயக்கம், பராமரிப்பு) தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைகளை பங்கஜ் குமார் பன்சால் மேற்கொண்டாதாக மின்வாரிய ஊழியர்கள் தரப்பிலிருந்து புகார் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் தொழிற்சங்கங்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் எனவும், சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து அதன் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய முயற்சிப்பதாகவும் ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர்கள் தி.ஜெய்சங்கர், எஸ்.ராஜேந்திரன் (தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு), தனசேகரன் (தொழிலாளர் சம்மேளனம்) மற்றும் மின் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பயிற்சி மருத்துவர்கள் பணி நேரம் குறித்த வழக்கு- மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.