ETV Bharat / city

'மோடி சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் காட்டுவது ஏன்?'

author img

By

Published : Sep 1, 2021, 10:39 AM IST

மனத்தின் குரல் நிகழ்ச்சியிலும், பொதுக் கூட்டங்களிலும் திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் ஆகியோரை மேற்கோள்காட்டி பேசுகிற பிரதமர் மோடி, சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டுவது ஏன் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ks alagiri speech
ks alagiri press meet

சட்டப்பேரவைத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர், அவரது ஆதரவாளர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "மத்திய அரசு யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக, எதேச்சதிகாரமாக மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து தலைநகர் தில்லியில் ஒன்பது மாதங்களாக விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இவர்களைச் சந்தித்து கோரிக்கையைக் கேட்க தயாராக இல்லை. இது மோடியின் சர்வாதிகாரத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசுகிற பாஜக, உழவர்கள் விரோத கட்சி. உழவர்கள் தங்கள் விளை பொருள்களை இதுவரை தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்றுவந்தார்கள். ஆனால், புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் அதானி, அம்பானி கையில் ஒப்படைக்கப்படுகிற இடர் ஏற்பட்டிருக்கிறது.

இதை எதிர்த்து ஏற்கனவே மாநிலம் முழுவதும் ஏர்கலப்பைப் பேரணி நடத்தி, காங்கிரஸ் கட்சி விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டிருக்கிறது. மக்கள் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருதத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 644 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில், மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்கிற சமஸ்கிருத மொழிக்கு மற்ற மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியைவிட 22 மடங்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கும் சேர்த்து ரூபாய் 29 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கி, மற்ற மொழிகளை பாஜக அரசு புறக்கணித்திருக்கிறது.

மனத்தின் குரல் நிகழ்ச்சியிலும், பொதுக் கூட்டங்களிலும் திருவள்ளுவர், பாரதியார், ஒவையார் ஆகியோரை மேற்கோள்காட்டி பேசுகிற பிரதமர் மோடி, சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டுவது ஏன்?

சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள தேசிய பணமாக்குதல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவின் சொத்துகள் பகிரங்கமாக விற்கப்பட்டு தனியாருக்குத் தாரைவார்க்கப்படும் என்று ராகுல் கூறினார். முக்கியத் துறைகளைத் தனியார்மயமாக்கி, வேலைவாய்ப்புகளைப் பறிப்பது மோடி அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான பரப்புரையை தமிழ்நாடு காங்கிரஸ் விரைவில் மேற்கொள்ளும்" என்றார்.

இதையும் படிங்க: கோயில்களில் திருக்குறள் வகுப்புகள் - தங்கம் தென்னரசு அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.