நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் - மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை

author img

By

Published : Jan 12, 2022, 8:11 PM IST

TN CM Stalin request directly to PM Modi

தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், செம்மொழித் தமிழாய்வுப் புதிய கட்டடம் ஆகியவைகளை காணொலிக் காட்சி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னை பெரும்பாக்கத்தில் 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தையும் டெல்லியிருந்து இன்று (ஜனவரி 12) நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.

புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் திறந்துவைக்கப்பட்டன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 450 எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடங்கள் கூடுதலாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 200 மருத்துவ வல்லுநர்கள், பணியாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம், இம்மாவட்டங்கள், சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் சுமார் ஒன்றரை கோடி மக்களுக்குத் தரமான உயர் மருத்துவச் சிகிச்சைகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும்

இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “வணக்கம், தை பிறந்தால் வழி பிறக்கும், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்வி என்பது அனைவருக்கும் தரக்கூடிய ஒன்று.

கரோனா தொற்று காலகட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் 83 ஆயிரத்திலிருந்த மருத்துவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மோடியிடம் நேரடியாக ஸ்டாலின் கோரிக்கை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வரும் ஆண்டில் இந்தியாவில் உயர்தர மருத்துவ சேவை டெலி மெடிசன் முக்கியப் பகுதியாக மாறும்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு

தமிழ்ச் செம்மொழி ஆய்வு மையம் தமிழ் மொழியை வளர்க்க உதவும் திருக்குறளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். நாட்டிலுள்ள தாய்மொழிக் கல்வியை மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது. செம்மொழி ஆய்வு நிறுவனம் மூலம் தமிழ் மொழியை ஆய்வுசெய்வதற்குப் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 15 வயதிலிருந்து 18 வயது இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவர்கள், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பலவற்றை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இவ்வாறு புதுமையான திட்டங்களைத் தீட்டி, சிறப்புறச் செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும். இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

பல மாநிலங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை நிலவிவரும் இச்சூழலில், தமிழ்நாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் கிராமப்புறங்களிலும் அரசுத் துறையிலும் சிறப்பாகச் சேவை செய்வதற்குத் தமிழ்நாடு அரசின் மாணவர் சேர்க்கை கொள்கையே அடிப்படையாகும். எங்களது கொள்கை, இந்த வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதே.

நீட் தேர்வு விலக்கு - தமிழ்நாடு அரசின் கோரிக்கை

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையின் வெற்றியும் இந்தக் கொள்கையின் விளைவே. இந்த அடிப்படைக் கொள்கை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். எனவே மனிதவள ஆற்றலின் அடித்தளமாக அமைந்துள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நாளில் பிரதமர் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தார். அதற்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும், தனிப்பட்ட என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழால் இணைவோம் - அயலகத் தமிழர் நாள் சிறப்புப் பாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.