அங்கன்வாடியில் சத்துணவு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

author img

By

Published : Aug 25, 2021, 9:04 AM IST

Updated : Aug 25, 2021, 11:58 AM IST

anganwadi-centres

இரண்டு வயது முதல் ஆறு வயது வரை அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சத்துணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இதுகுறித்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு செயலர் ஷம்பு கலோலிக்கர் வெளியிட்டுள்ள அரசாணையில், "செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு சூடான சத்துணவு வழங்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அங்கன்வாடி மையங்களில் இரண்டு வயது முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மதிய உணவு காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மையத்தில் வழங்கப்படும். எனவே அங்கன்வாடி பணியாளர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • அங்கன்வாடி மையத்தில் நுழையும்போது தங்களது கைகளை சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முறையாக வாய், மூக்கினை மூடியவாறு முகக்கவசம் அணிந்ததை உறுதி செய்த பின்னரே அங்கன்வாடி மையத்திற்குள் நுழைய வேண்டும்.
  • சுத்தம் செய்தல், காய்கறிகளை கழுவுதல், நறுக்குதல், சமைத்தல், பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்து செயலின்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • மறுசுழற்சி முகக்கவசங்களை தினமும் சுத்தமாக துவைத்திருக்க வேண்டும்.
  • தினமும் சமையலறை பொருள்கள், குடிநீர் தொட்டி, பாத்திரங்கள், ஆகியவை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும்.
  • காலாவதியான, தரமற்ற பொருள்களை பயன்படுத்தக் கூடாது.
  • நகங்களில் நெயில் பாலிஷ், செயற்கை நகங்கள் கட்டாயம் வைத்திருக்கக்கூடாது.
  • அனைத்து பணியாளர்களும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்.
  • மூக்கு சொறிதல், தலை சீவுதல், கண்கள், காது, வாய் தேய்தல், வளாகத்தில் எச்சில் துப்புதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அப்படி தன்னிச்சையாக செய்தாலும், உடனடியாக சோப்பு கொண்டு கை கழுவ வேண்டும்.
  • அங்கன்வாடிகளின் வெளிப்புறத்தில், குப்பைகள், கழிவுநீர், விலங்குகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் வளாகத்திலேயே உட்கொள்ள செய்ய வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.
  • குழந்தைகள் சமூக இடைவெளியுடன் உண்ண ஏற்பாடு செய்து, குடிநீரை காய்ச்சி வடிகட்டி கொடுக்க வேண்டும்.
  • உண்ணுவதற்கு தகுதி உடைய அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு பதிலாக உலர் உணவுப் பொருட்கள், அதற்கு ஈடாக உணவு பாதுகாப்பு தொகை வழங்கப்படமாட்டாது என்பதை உறுதி செய்யவேண்டும்.
  • பணியார்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் காணப்பட்டால், மையத்திற்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த வேளையில் சமைக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • குழந்தைகள், பெற்றோர், பாதுகாவலர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது.

இதையும் படிங்க: மதிய உணவில் வாழைப்பழம்? பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அதிரடி

Last Updated :Aug 25, 2021, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.