ETV Bharat / city

புகையிலை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் - ராமதாஸ்

author img

By

Published : Sep 1, 2021, 9:03 AM IST

Updated : Sep 1, 2021, 9:26 AM IST

முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய சட்டத் திருத்தம் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்கப்படுவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும். இதற்கான சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி, கடுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

pmk
ramadoss statement on tobacco issue

சென்னை: புகையிலை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நடவடிக்கை தேவை என்று ராமதாஸ் தனது அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் குட்கா விற்பனை முற்றிலுமாகத் தடுக்கப்படும்; பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணியின் முயற்சிகள்

போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பது குறித்து சட்டப்பேரவையில் வினா & விடை நேரத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி எழுப்பிய வினாவுக்கு முதலமைச்சரின் இந்த விடை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சீரழிக்கும் சக்திகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் முதலிடத்தில் உள்ளன என்பதை எவராலும் மறுக்க இயலாது.

மதுவின் தீமைகளைப் போலவே குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் தீமைகளுக்கு எதிராகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடிவருகிறது. குட்காவின் தீமைகளை உணர்ந்து இருந்ததால்தான் அதன் உற்பத்தி, விற்பனையைத் தடைசெய்ய வகைசெய்யும் சட்டத்தை அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்தார்.

அந்தச் சட்டத்தைப் பின்பற்றித்தான் நாட்டில் 24 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் குட்கா தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக குட்கா தடைசெய்யப்படாத நிலையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அன்புமணி தொடர்ந்து கடிதங்கள் எழுதியதைத் தொடர்ந்தே 2013 மே 8 அன்று தமிழ்நாட்டில் குட்கா தடைசெய்யப்பட்டது.

நடப்புக் கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்றுக

ஆனாலும், இப்போதும்கூட சட்டவிரோதமாக குட்கா விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குட்கா மட்டுமின்றி மிக மோசமான உடல்நல பாதிப்புகளையும், மனநல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என அனைத்து வகையான போதைப் பொருள்களும் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.

குறிப்பாக வெளிநாட்டு மாணவர்களும், வெளிமாநில மாணவர்களும் அதிக அளவில் பயிலும் கல்வி நிறுவனங்களில் இத்தகைய போதைப் பொருள்கள் கட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி கல்வியை இழந்த மாணவர்கள் ஏராளம். கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியரின் தற்கொலைகளுக்கு இதுவே காரணமாகும்.

இத்தகைய சூழலில் முதலமைச்சர் அறிவித்துள்ள புதிய சட்டத் திருத்தம் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்கப்படுவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும். இதற்கான சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றி, கடுமையாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடை இருந்தும் அதற்கு மதிப்பில்லை

அப்போதுதான் பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவியர் உள்ளிட்ட இளைய தலைமுறையினரை போதைப் பொருள் சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மட்டும்தான் மாணவர்களைச் சீரழிக்கின்றன என்று கூற முடியாது. அவற்றுக்கு இணையாகப் புகையிலைப் பொருள்களும்தான் சீரழிக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் புகையிலைக்கு பலியாகின்றனர்; புகையிலைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாற்றாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன்தான் சிறுவர்கள் மீது புகையிலைப் பொருள்களை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் திணிக்கின்றன.

பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தத் தடை மதிக்கப்படவில்லை. மாறாக, மாணவ, மாணவியரின் கண்களில் எளிதில்படும் வகையிலும், மாணவர்களே எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையிலும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை கடைகளில் அவற்றின் உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

புகையிலை இல்லா தமிழ்நாடு

குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனையைத் தடுப்பதில் காட்டும் அதே அக்கறையை சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழ்நாடு அரசு காட்ட வேண்டும்.

புகையிலை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கி இளைஞர்களைக் காப்பாற்றுவதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: காவல் துறையினரை ஊக்குவிக்க சிறப்பு விருதுகள் - முதலமைச்சர் தகவல்

Last Updated :Sep 1, 2021, 9:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.