சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முன்னாள் ரஜினி மக்கள் மன்றத்தின் 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவின் மாநில சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி கரூர் மற்றும் மத்திய சென்னையின் 3 மாவட்ட செயலாளர்களும், கோயமுத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் மத்திய சென்னையைச் சேர்ந்த மகளிர் அணி செயலாளர்கள் இணைந்தனர்.
இத்துடன் வர்த்தக அணி, வழக்கறிஞரணி மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களுடன் இணைந்தனர்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக இருந்த சீனிவாசன், “ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காதது எங்களுக்கு ஏமாற்றம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் கட்சி தொடங்குவார் என்று நாங்கள் செய்த பணியை திமுகவிடம் தொடர்வோம்” என்றார்.
மேலும், “ரசிகர் மன்றத்திலிருந்து இன்னும் பல நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர்” என்றார். காஞ்சிபுரம் மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்த விஜயலட்சுமி கூறுகையில், “பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எனத் தேர்தல் வாக்குறுதியை விரைவாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். சட்டப்பேரவையில் அரியணை ஏறியது போல் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் களப் பணிகளை செய்து திமுகவை வெற்றி அடையச் செய்வோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : கால சூழலால் சாத்தியப்படவில்லை- ரஜினிகாந்த்!