பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

author img

By

Published : Dec 7, 2021, 8:00 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை, முன்கூட்டியே விசாரிக்கக் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை: மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பப்ஜி மதனின் மனைவிக்கு உடல்நலக்குறைவு

இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதன் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், 18 மாதங்களே ஆன தனது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டு, தனக்கு எதிரான சட்ட போராட்டங்களை நடத்திவரும் தன் மனைவி உடல் நலக்குறைவால் சிரமப்படுவதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கும் சில உடல்நலக்குறைவு இருப்பதால் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை விரைந்து விசாரிக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி. சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்ததால்தான் மதனை குண்டர் சட்டத்தில் அடைத்ததாகவும், இதுபோன்ற காரணங்களுக்காக அவசரமாக விசாரிக்கக் கூடாது எனவும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை முன்கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற பப்ஜி மதனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த சசிகலா;பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.