50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு... கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய உத்தரவு!

author img

By

Published : Aug 13, 2021, 7:46 AM IST

50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு

தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் வழங்குவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "2021-2022ஆம் நிதியாண்டுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வின் போது கவனத்தில் கொண்டு சத்துணவு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது, கோவிட் - 19 காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சில பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளன. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றல் கணிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகிறது.

அரசாங்கம் இதைத் தவிர்த்திடும் வகையில் மதிய உணவுத் திட்டத்தில் ரொட்டி, முட்டை ஆகியன சேர்த்து பள்ளிக் குழந்தைகளுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிட அரசின் பரிசீலனையில் உள்ளது.

மேலும், பள்ளிக் குழந்தைகள் யாரேனும் உடல் உழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனாரா என்பதை ஆய்வு அலுவலர்கள் மேற்பார்வை செய்து குறைகள் இருப்பின் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியரின் மூலமாகவோ அவற்றை நிவர்த்தி செய்து பள்ளி மாணவர்கள் பயன்பெற தக்க வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.