வேலைவாய்ப்புச் செய்திகள்: அறநிலையத்துறை கல்லூரியில் பணி - இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி

author img

By

Published : Oct 14, 2021, 5:45 PM IST

hrce job

அறநிலையத்துறை தொடங்கியுள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரியில் நிரப்பட உள்ள பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என இணை ஆணையர் காவேரி அறிவித்துள்ளார்.

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்ரீகபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்னுமிடத்தில் அருள்மிகு பழனியாண்டவர் கலை, அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேர அக்டோபர் 8ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பி.காம், பிபிஏ, பிஎஸ்சி(கம்ப்யூட்டர் சயின்ஸ்), பிசிஏ, தமிழ், ஆங்கிலம், கணக்கு, உடற்கல்வி இயக்குநர், நூலகர் ஆகிய பணியிடங்களுக்கு வரும் 18 ந் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10, +2, உயர்கல்வி பட்டம் பெற்று இருப்பதுடன், செட்/நெட்/பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், உதவியாளர் / நிதியாளர், இளநிலை உதவியாளர் /தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், துப்புரவாளர், பெருக்குபவர் ஆகிய பணியிடங்களில் 11 பேர் தேர்வுச் செய்யப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு விதிகளின் படி இருத்தல் வேண்டும் எனவும், தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

இது குறித்து அறநிலையங்கள் துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விதிகளின் படி திருக்கோயில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நிர்வகிக்கப்படும் அனைத்து நிர்வாகத்திலும் இந்துகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள் என்ற விதியின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.