MullaiPeriyarDam: இப்போ 142 அடி; விரைவில் 152 அடி - அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

author img

By

Published : Nov 30, 2021, 10:47 PM IST

MullaiPeriyarDam visited by Duraimurugan

முல்லைப் பெரியாறு அணையில் நான்காவது முறையாக, நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை: இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு அணையை நான் 05.11.2021 அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர்த்தேக்குவது பற்றிய அறிவுரைகளை வழங்கினேன்.

’அட்டவணைப்படியே நீர்த்தேக்கப்படும்’
பருவ மழைக்காலத்தில், குறிப்பாக வெள்ளக்காலங்களில், காலமுறைப்படி வரும் வெள்ள நீரைத் தேக்கி வைத்து முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அதன்படி அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்துவதே 'மாதவாரியான நீர்மட்ட அட்டவணை (Rule Curve)' ஆகும்.

இதில் பருவ மழைக் காலங்களில் ஜூன் 10ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையில் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் அணையின் நீர்மட்டம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய நீர் வளக்குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதவாரியான நீர்மட்ட அட்டவணைப்படி அணையில் இன்று 30.11.2021 காலை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.

நிலையான வழிகாட்டுதல்படியே நீர்திறப்பு

அணைக்கு அதிகமாக நீர் வரத்து இருக்கும் நாட்களில், நிலையான வழிகாட்டுதலின்படி (Standard Operating Procedure) சம்பந்தப்பட்ட கேரள அலுவலர்களுக்கு முன்னரே தெரியப்படுத்திய பின்னரே, அணையின் நீர் வழிந்தோடி மதகுகள் திறக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்படுவது படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.

07.05.2014இல் உச்ச நீதிமன்றம் 142 அடி வரை நீர்த்தேக்கலாம் என முறையாக ஆணையிட்ட பின்னர், இன்று (30.11.2021), நான்காவது முறையாக அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை முடித்த பின்னர், அணையின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம். இதற்கு சில இடையூறு இருந்தாலும், அப்பணிகளை முடிக்க, தொடர்ந்து எல்லாவிதமான முயற்சிகளும் நடவடிக்கைகளும் முதலமைச்சருடன் கலந்து பேசி எடுக்கப்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Covid19 Restrictions: டிசம்பர் 15ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.