ETV Bharat / city

’நிபா வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம்’ - சுகாதார செயலர்

author img

By

Published : Sep 5, 2021, 3:50 PM IST

Updated : Sep 5, 2021, 5:15 PM IST

சென்னை: நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் தேவையில்லை என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் இன்று (செப்.05) சென்னை வந்தடைந்தன.

அதனைத் தொடர்ந்து டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுச்சுகாதரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தமிழ்நாட்டில் 1% பாதிப்பு

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "கேரள மாநிலத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்பு 30 ஆயிரமாக இருந்து வருகிறது. அதேபோல் ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இரண்டு விழுக்காடு என்கிற அளவில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடாகவே உள்ளது.

ஒரே நாளில் 6.2 லட்சம் தடுப்பூசி

தமிழ்நாட்டில் 3.5 கோடி தடுப்பூசிகள் நேற்று (செப்.04) வரை செலுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 14.4 லட்சம் கையிருப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6.2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 12ஆம் தேதி 10 ஆயிரத்துக்கும் அதிகமான அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

நிபா வைரஸ் பற்றி பதற்றம் வேண்டாம்

கேரளாவில் 12 வயது குழந்தை நிபா வைரஸால் உயிரிழந்துள்ளது. இதனால் எல்லையோரப் பகுதிகளில் கரோனா மட்டுமல்லாமல் பிற காய்ச்சல்களையும் கண்காணித்து வருகிறோம். எனவே நிபா வைரஸ் பற்றி தேவையற்ற பதற்றம் தேவையில்லை.

மேலும் நாமக்கல், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளையும் கூர்ந்து கண்காணித்து வருகிறோம். அதேபோல் கோவை, நீலகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

மாணவர்கள் மன அழுத்தத்தைப் போக்கவே பள்ளிகள் திறப்பு

அதனைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு, ”ஏற்கெனவே மாணவர்கள் வீட்டில் இருந்து மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியதால்தான் படிப்படியாக பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது மாணவர்களுக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாகக் கண்காணித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் இருந்த அறைகள் மூடப்படும்” என்றார்.

மேலும், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றதாக வணிகர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Last Updated : Sep 5, 2021, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.