சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை

author img

By

Published : Aug 2, 2022, 5:30 PM IST

Etv Bharat

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 குற்றவாளிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக களியக்காவிளை போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் இருவேறு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தது ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி பின் தலைமறைவான தீவிரவாதி காஜா மைதீன், நவாஸ், அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பதும், ஜிகாதி தீவிரவாதிகளான அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கேரளா தப்பிச் செல்லும்போது களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது.

இதனிடையே தீவிரவாதி காஜா மைதீனுக்கு உதவியதாக செயல்பட்ட மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு கியூ பிராஞ்ச் போலீசாரால் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனைக் கொன்ற அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் பெங்களூரில் பதுங்கியிருந்த நிலையில், பெங்களூர் சிறப்புப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த தீவிரவாதி காஜா மைதீன், நவாஸ் உள்ளிட்ட 3 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்.

அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடர தீவிரவாத தொடர்பு இருப்பதன் காரணமாக கியூ பிராஞ்ச் போலீசார் பதிவு செய்த வழக்கையும், களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட வழக்கையும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து இவ்விரு வழக்குகளும் ஒரே வழக்காக மாற்றப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசியப் புலனாய்வு முகமை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 2021 ஆம் ஆண்டு இவ்வழக்கில் தீவிரவாதிகளான காஜா மைதீன், அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தேசிய புலனாய்வு முகமை போலீசார் பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு உதவியதாக கியூ பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்ட மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி உள்ளிட்ட சிலரை வில்சன் கொலை வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா மற்றும் ஜாஃபர் அலி ஆகிய 3 பேரை நேற்று மாலை முதல் வரும் 5 ஆம் தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் 3 பேரையும் நேற்று பெங்களூர் மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்த போலீசார் புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.