'ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்'

author img

By

Published : Sep 17, 2021, 11:57 AM IST

Updated : Sep 17, 2021, 12:22 PM IST

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம்
ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் ()

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில், "1995இல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும், வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன.

அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தாலும் தமிழ்நாடு தொழில்துறை வரலாற்றைப் பொறுத்தவரை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக முக்கியமானது. அடுத்தடுத்து பல கார் தொழிற்சாலைகள் தங்கள் தயாரிப்பை தமிழ்நாட்டில் தொடங்க இந்த ஒப்பந்தம் காரணமாக அமைந்தது.

தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் பலரின் இரவு பகலான உழைப்பு இதன் பின்னால் இருந்தது. பிற்பாடு கமிஷன் சாம்ராஜ்யத்தால் இந்தக் கார் நிறுவனங்கள் அல்லாடியதும், தங்களுக்கு வரவேண்டிய மதிப்புக் கூட்டு வரி பங்கினை வாங்குவதற்குக் கூட தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்ததும் தமிழ்நாட்டின் ஊழல் மலிந்த கழக ஆட்சிகளின் துயர வரலாறு.

1996இல் ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது தயாரிப்பைத் தொடங்கியது. முதற்கட்டமாக சுமார் இரண்டாயிரத்து 100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது. பிறகு படிப்படியாக பல அடுக்குகளாகத் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துகொண்டது.

ஏறத்தாழ தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இன்று நேரடியாக சுமார் நான்காயிரம் தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது ஃபோர்டு இந்தியா நிறுவனம். தொழில் விரிவாக்கம் என்பது லாபம், எதிர்காலச் சந்தை தேவை ஆகியவற்றை மனத்திற்கொண்டே நிகழும்.

‘25 ஆண்டுகளுக்குப் பின் எங்களுக்கு பலத்த இழப்பு, நிறுவனத்தை விரைவில் மூடப்போகிறோம்’ என அறிவித்திருக்கிறது ஃபோர்டு நிறுவனம். நிர்வாகத்தின் இந்தத் திடீர் முடிவினால் இந்நிறுவனத்தின் நேரடி - மறைமுக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.

ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நசிவு, கரோனா கால வருவாய் இழப்புகள் எனத் தமிழ்நாடு தத்தளித்துவருகிறது. இத்தனை பேருக்கும் உடனடியாக மாற்று வாழ்வாதாரம் கிடைக்க வழியே இல்லை. கடுமையான முயற்சிகள் எடுத்து ஏராளமான சலுகைகளை அறிவித்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கத்தான்.

லாபம் வந்தால் எனக்கு இழப்பு வந்தால் மூடிவிட்டு ஓடிவிடுவோம் என்னும் குறுகிய மனப்போக்கு ஏற்புடையதல்ல. இதுநாள் வரை தமிழ்நாடு அரசினால் அளிக்கப்பட்ட சலுகைகள், தளர்வுகள், உதவிகள், மானியங்கள், நீர் உள்ளிட்ட வளங்கள் ஆகியவற்றுக்குப் பொருளே இல்லாமல் ஆகிவிடும்.

முதலீட்டை ஈர்ப்பதில் காட்டும் அக்கறையும் கவனமும் அந்நிறுவனங்களினால் மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பலன் கிடைப்பதை உறுதிசெய்வதிலும் காட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு குட்பை சொன்ன ஃபோர்டு - 4000 தொழிலாளர்களின் கதி என்ன?

Last Updated :Sep 17, 2021, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.