கனமழை: அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தல்

author img

By

Published : Aug 4, 2022, 9:30 PM IST

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ள நீரினை எதிர்கொள்ள அனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

இயல்பைவிட 97% மழைப்பொழிவு: அதில், 'தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 3.8.2022 முடிய தமிழ்நாட்டில் 249.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 97 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 35 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 6.95 மி.மீ. ஆகும்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

நாளை (ஆக.5) மற்றும் நாளை மறுநாளும் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்' என குறிப்பிட்டார்.

பேரிடர் மீட்புக் குழு வருகை: மேலும், கனமழையின்போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன், ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்களும் நீலகிரி மாவட்டத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

மேட்டூர் அணை; வெள்ள அபாய முன்னெச்சரிக்கை: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை 9.00 மணி முதல் 2 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகக் கூடும். எனவே, இந்த மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உடனே தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அறிவிப்பின்றி நீரைத் திறக்கக் கூடாது: இக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசிய போது, போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது; குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதேபோல, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் எனவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண உதவிகளையும் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒகேனக்கலில் நீர்வரத்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.