சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு ..அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Sep 22, 2022, 9:14 AM IST

Etv Bharat

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா, “வள்ளலார் – 200” என்ற தலைப்பில் 52 வாரங்கள் சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். அதற்குண்டான ஆக்கபூர்வமான பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. முதலமைச்சரிடம் வள்ளலாரின் சர்வதேச மைய வரைபடத்திற்கான ஒப்புதலை பெற்றபின், விரைவாக அப்பணிகள் துவக்கப்படும்.

வள்ளலாருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அவர் வருவித்த நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அக்டோபர் 5 ஆம் தேதியை தனிப்பெருங்கருணை நாள் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற பேரவையில், வள்ளலார் இந்த உலகிற்கு வருவித்த நாளின் 200 வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்மசாலை தொடங்கிய 156 ஆண்டு கொண்டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

வள்ளலாருக்கு எந்த ஆட்சியிலும் செய்யாத சிறப்பினை செய்திடும் வகையில், முதலமைச்சர் “வள்ளலார் – 200” என்ற இலட்சினை மற்றும் தபால் உறையினை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினை முப்பெரும் விழாவில் தொடங்கி வைக்கிறார்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவினையும் இந்த அரசு தான் ஓராண்டு காலம் சிறப்பாக நடத்தியது. அதேபோல் வள்ளலாருக்கு சிறப்பு செய்யும் வகையில் 52 வாரங்கள் விழா எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதோடு, துறையை உற்சாகப்படுத்தி, முழு சுதந்திரம் அளித்து சிறந்த முறையில் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.

வள்ளலாரின் புகழ் மேலும் ஓங்கிட அவர் ஆற்றியிருக்கின்ற, நாட்டிற்காக விட்டுச் சென்றுள்ள தத்துவங்களை நிலை நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

மேலும், நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்கள் யார் கைவசம் இருந்தாலும் அதை மீட்பதற்கு இந்த அரசு தயங்காது. அந்த வகையில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுமார் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை மீட்டு இருக்கின்றோம்.

இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை ரோவர் கருவியின் வாயிலாக தற்போது அளவிட்டு வருகிறோம். இதுவரை சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இக்கருவியின் மூலமாக அளவிடப்பட்டு, பாதுகாப்பு வேலிகளை அமைத்து வருகின்றோம்.

இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. திருக்கோயில்களுக்கு லட்சக்கணக்கான ஏக்கர் சொத்துக்கள் இருப்பதால் அச்சொத்துக்கள் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து, அந்த நிலங்களை பாதுகாக்கின்ற துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: செல்போன் பறிப்பு வழக்கு... தப்பிய 17 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.