சுழற்சி முறையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம்

author img

By

Published : Sep 14, 2021, 7:32 PM IST

Updated : Sep 14, 2021, 8:11 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் எப்போது தொடங்கலாம் என்பது குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் நாளை (செப். 15) வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை: பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (செப். 14) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை தொடங்குவதில் உள்ள சவால்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அலுவலர்களுக்கு சான்றிதழ்

மேலும், சிறந்த முறையில் பணியாற்றிய மூன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்திக்கு சான்றிதழையும், மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதியையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டில், ஏற்கனவே 9, 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வகுப்புகள் சுழற்சி முறையில்தான்

அதனைத் தொடர்ந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இப்போது திறக்கலாமா அல்லது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை சுழற்சி முறையில் திறக்கலாமா என்பது குறித்தும் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து முதலமைச்சரிடம் நாளை பள்ளிக்கல்வித்துறை சார்பாக விரிவான அறிக்கையை கொடுக்க உள்ளோம். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும்.

கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதும், தமிழ்நாட்டில் 83 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவில் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

சட்ட போராட்டம் தொடரும்

பள்ளிகள் திறந்தவுடன் அதிகமான மாணவர் வருகைப்பதிவேடு கன்னியாகுமரி மாவட்டத்திலும், குறைந்த வருகைப்பதிவேடு கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. மாணவர்களை நேரடி வகுப்பிற்கு வரவேண்டுமென யாரும் வற்புறுத்தவில்லை. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தமிழ்நாட்டின் குறிக்கோளாக இருந்தாலும், நீட் பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது, அது எந்த இடத்திலும் நிறுத்தப்படவில்லை. மேலும் நீட் குறித்த சட்ட போராட்டத்தை அரசு ஒருபுறம் எடுத்து வருகிறது.

பெற்றோர்கள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்க கூடாது. அவர்களுக்கு பெற்றோர்கள் பாதுகாப்பு அரணாக இருந்து, மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் சாதித்துக் காட்டலாம் என்ற வகையில் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு - கொதிக்கும் கமல்

Last Updated :Sep 14, 2021, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.