பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களை அரசு தனியாருக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது - நீதிமன்றம்

author img

By

Published : Nov 23, 2021, 7:45 AM IST

MHC, Madras HIgh court, சென்னை உயர் நீதிமன்றம்

பொது இடத்தைத் தனியாருக்கு ஒதுக்குவது என்பது லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும் எனவும், பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களைத் தனியாருக்கு விட்டுக் கொடுத்துவிடாமல், அதை அரசு கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சுகுமாரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், "வந்தவாசி தாலுகாவில் உள்ள மடம் என்ற கிராமத்தில் அரசுப் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட கிராம நத்தம் நிலம், அந்தப் பகுதி மக்களுக்காக விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தின் மூன்று சென்ட் நிலத்தில் ரத்தினவேல் என்பவர் வீடு கட்டியுள்ளார். இதற்கான அனுமதியை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது விதிமுறைகளுக்கு முரணாக என்பதால் அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.

ஆவணங்களின்படி ஒதுக்கீடு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில், "விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டுவதற்கு சட்டவிரோதமாகச் சிலருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து திருவண்ணாமலை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சிறப்பு வட்டாசியர் அறிக்கையைத் தாக்கல்செய்தார்.

அதில், 'வீடற்ற ஆதி திராவிடர் மக்களுக்கு வீடு வழங்க, மடம் கிராமத்தில் இடம் ஒதுக்குவதற்காக 1964இல் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையிலும், வருவாய் ஆவணங்களின் அடிப்படையிலும் ரத்தினவேலுக்கு வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

லஞ்சத்தை ஊக்குவிப்பது போலாகிவிடும்

வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள இடம் விளையாட்டு மைதானத்திற்கான கிராம நத்தம் என்று கூறப்பட்டுள்ளதால், வேறு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க முடியாது. மேலும், 2015இல் வழக்குத் தொடர்ந்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் மனு தாக்கல்செய்யவில்லை.

அந்த கட்டுமானத்தையாவது அலுவலர்கள் நிறுத்தியிருக்கலாம். பொது இடத்தைத் தனியாருக்கு ஒதுக்குவது லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும். சட்டவிரோதமாக அரசு நிலம், விளையாட்டு மைதானத்தை அலுவலர்கள் இதுபோன்று ஒதுக்கினால், அவர்களால் பொதுச் சொத்துகளைப் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களைத் தனியாருக்கு விட்டுக் கொடுத்துவிடாமல், அதை அரசு கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தொடர அனுமதிப்பது மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, ஊழல் வழிகளில் தனிநபர்களுக்கு ஆதரவாக இத்தகைய பொது நிலங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அரசு அலுவலர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தும்.

வீட்டை இடிக்க உத்தரவு

எனவே, கிராம மக்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இடத்தை ஒதுக்கிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அந்த வீட்டை ஒரு மாதத்திற்குள் இடிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: TENT HOUSE: கொடைக்கானல் சுற்றுலா போறீங்களா? அப்போ அவசியம் இத பண்ணாதீங்க மக்களே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.