நாமக்கல் தனியார் பள்ளியின் தேர்வு மையத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?

author img

By

Published : May 12, 2022, 2:02 PM IST

Updated : May 12, 2022, 3:01 PM IST

நோட்டீஸ்

நாமக்கல் தனியார் பள்ளியின் தேர்வு மையத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

சென்னை: தேர்வு மையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இருந்த நாமக்கல் குருக்கபுரம் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் பொதுத் தேர்வு மையத்தினை ஏன் ரத்து செய்யக் கூடாது என நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாத வகையில் அரசுத் தேர்வுத்துறை தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்வு மையங்களுக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களையோ, துணை முதல்வர்களையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வு மையத்திற்கும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்தல் கூடாது.

அரசுப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களையே துறை அலுவலராக நியமிக்க வேண்டும். மேலும் தேர்வு நடைபெறும் அன்று அந்தப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட யாரும் இருக்கக் கூடாது என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் தேர்வினை கண்காணிக்க மாநில அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வினை நடத்துவதற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஒருவர் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆங்கிலம் தேர்வின் போது, மாநில அளவில் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலர் நாமக்கல் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தப்போது, காலை 9.30 மணிக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் உதவியாளர் பள்ளி வளாகத்தில் இருந்துள்ளனர்.

ஏற்கனவே முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான தேர்வு தொடர்பான அறிவுரை கூட்டத்தில், தேர்வு நாளான்று பள்ளி வளாகத்தில் அந்தப் பள்ளியை சேர்ந்த யாரும் இருக்கக் கூடாது என கூறப்பட்டது. தேர்வு விதிமுறையையை மீறி அந்தப் பள்ளியின் முதல்வர் மற்றும் 2 உதவியாளர்கள் உள்ளே அனுமதித்தது குறித்து முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜன் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதேபோல் பள்ளியின் வளாகத்தில் இருந்தது குறித்து, முதல்வர் 2 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தாங்கள் கூறிய equivalency சான்று நகலினை முன்னிலைப்படுத்துவமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அதனை தேர்வு நாளன்று பள்ளியில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதற்கான முழுக்காரணம் தெரிவிக்க வேண்டும்.

அரசு பொதுத்தேர்வு விதிமுறைகளை மீறி செயல்பட்டதனால் குருக்காபுரம் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொதுத் தேர்வு மையத்தை ஏன் ரத்து செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தினை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர் கூறும்போது, "தேர்வு விதிகளை மீறி பள்ளியில் இருந்ததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் 12 ஆம் தேதி மதியம் வரையில் அளிக்கப்படவில்லை" என்றார்.

இதையும் படிங்க: சிதம்பரத்தில் அதிகாரிகளை தடுத்த தீட்சிதர்கள்.. நானே வருகிறேன் என இறங்கிய - சேகர்பாபு

Last Updated :May 12, 2022, 3:01 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.