ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்; கொலையாளி சதீஷ் பிடிபட்டது எப்படி?

author img

By

Published : Oct 14, 2022, 5:22 PM IST

ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்; கொலையாளி சதீஷ் பிடிபட்டது எப்படி?

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மாலை கல்லூரி மாணவியான சத்யா என்பவரை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளியான சதீஷ் பிடிபட்டது குறித்த விரிவான தொகுப்பைக் காணலாம்.

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா வழக்கம் போல் கல்லூரி செல்வதற்கான புறநகர் ரயிலில் ஏற முற்பட்டுள்ளார். முன்னதாக நண்பர்களுடன் இருக்கும்போது, அவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் தன்னுடன் வந்துவிடுமாறு சத்யாவிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

புகைப்படத்தைக் கொண்டு விசாரணை: அப்போது சத்யாவுடனான வாக்குவாதம் அதிகரித்து, அவரை ரயிலின் முன்பு தள்ளிவிட்டுக்கொலை செய்துள்ளார். சத்யாவிற்கு உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில், சத்யாவை தன்னோடு வந்துவிடுமாறு வற்புறுத்தியது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்த பிறகு சதீஷ் தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும், ஆனால் பொதுமக்கள் தன்னைப்பிடிக்க வரும் பயத்தில் ஓடியதாகவும் பிடிபட்ட பிறகு காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தப்பியோடிய சதீஷை ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்ற புகைப்படத்தை வைத்து காவல் துறையினர் தேடி வந்துள்ளனர். குறிப்பாக சதீஷ் தொப்பி அணிந்திருந்த புகைப்படத்தை வைத்து அதன் மூலம் தனிப்படை காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.

செல்போன் சிக்னல்: சதீஷ் குடி போதைக்கு அடிமையானவர் என்பதால் பரங்கிமலை காவல் குடியிருப்பினைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளில் காவல் துறையினர் தேடி உள்ளனர். சதீஷ் கையில் காசு இல்லாததால் என்ன செய்வது என்பது தெரியாமல் சுற்றி திரிந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் கையில் வைத்திருந்த செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு சதீஷ் தலைமறைவாக சுற்றியுள்ளார்.

இந்நிலையில் துரைப்பாக்கம் பகுதியில் சதீஷ் செல்போனை ஆன் செய்த நிலையில், சைபர் கிரைம் காவல் துறையினர் சிக்னல் மூலமாக சதீஷ் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுபிடித்து, நான்கு தனிப்படைனர் மூலம் துரைப்பாக்கம் ஈசிஆர் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடைசியாக சதீஷ் செல்போன் சிக்னல் கிடைத்த இடத்தைச்சுற்றி ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் தனிப்படை காவல் துறையினர் தெருத்தெருவாக தேடிவந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சதீஷ் செல்லும் இடத்தில் எல்லாம் பின் தொடர்ந்து காவல் துறையினர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் காவல் துறையினர் நள்ளிரவில் புகைப்படத்தை வைத்து தேடிக்கொண்டிருந்தபோது ஈசிஆரின் ஒரு சாலையின் எதிரே தொப்பி அணிந்து கொண்டு, கொலை செய்தபோது உடுத்தியிருந்த அதே உடையுடன் சதீஷ் வருவதை தனிப்படை காவல்துறையினர் கண்டுபிடித்து, சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

சதீஷின் வாக்குமூலம்: கைது செய்யப்பட்ட சதீஷிடம் மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி முழு வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சத்யாவின் வீட்டிற்கு இந்த விவகாரம் தெரியவந்த நிலையில், சத்யாவின் தாயான தலைமைக்காவலர் ராமலட்சுமி கேட்டுக்கொண்டதன்பேரில், கடந்த 7 மாதங்களாக சத்யா சதீஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் பல முறை சதீஷ் சத்யாவிடம் பேச முற்பட்டபோது தொடர்ந்து தவிர்த்து வந்தார். பின்னர் கடந்த வாரம் அவரது உறவினரான ராகுல் என்பவருடன் சத்யாவிற்கு நிச்சயம் செய்யப்பட்டதைக்கண்டு ஆத்திரமடைந்து, நேற்று கல்லூரிக்குச்செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது சத்யாவை ரயில் முன்பு, தள்ளி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல் துறையினர் அலட்சியம்?: இதற்கிடையில், இருவருக்கும் நடந்த பிரச்னை தொடர்பாக மூன்று முறை காவல் நிலையத்திற்குச்சென்று புகார் அளிக்கப்பட்டும், காவல் துறையினரின் அலட்சியத்தால் தற்போது காவலரின் குடும்பமே சிதைந்து போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2 மாதங்களாக சத்யாவிற்கும், சதீஷிற்கும் இடையே பிரச்னை நிலவி வந்துள்ளது. கடந்த மே மாதம் தியாகராய நகரில் சத்யா படிக்கும் கல்லூரிக்குச்சென்ற சதீஷ், கையைப் பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாம்பலம் காவல்துறையினர் அவரைப் பிடித்து, வழக்குப்பதிவு செய்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

அதேபோல சத்யா வீட்டின் முன்பு, சதீஷ் குடித்துவிட்டு அவரது குடும்பத்தினருடன் சண்டையிட்ட போதும் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல மொத்தம் 3 முறை சத்யாவிடம் வம்பிழுத்த வழக்கில் சதீஷ் காவல் நிலையம் வரை சென்றபோது, இரு குடும்பத்தினரையும் காவல்துறையினர் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் பின்பு தான் சதீஷ் நேற்று ரயில் நிலையத்திற்குச்சென்று சத்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சதீஷிடம் விசாரணை முடித்த பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.