நிவர், புரெவி புயல்களின் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவி

author img

By

Published : Feb 14, 2021, 8:16 AM IST

financial assistance to tamilnadu

நிவர், புரெவி புயல்களின் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டிற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி: பேரிடர் நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரூ.286.91 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 2020-ஆம் ஆண்டு வெள்ளம், புயல், பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண மேலாண்மை நிதியிலிருந்து கூடுதலாக ரூ.3,113.05 கோடியை அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலானக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மாநிலங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர்களை துணிச்சலாக எதிர்கொண்ட மக்களுக்கு உதவ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக அமித் ஷா தெரிவித்தார்.

அதன்படி,

  • தமிழ்நாட்டிற்கு 2020 நிவர் புயலின் பாதிப்புக்காக ரூ.63.14 கோடியும், 2020 புரெவி புயலின் பாதிப்புக்காக ரூ.223.77 கோடியுமாக மொத்தம் ரூ.286.91 கோடி ரூபாய் வழங்கப்படும்
  • 2020 நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ.9.91 கோடி
  • 2020 தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.280.78 கோடி
  • இதேபோல் 2020 தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் மாநிலத்திற்கு ரூ.1,255.27 கோடி
  • 2020 காரீப் பருவகாலத்தின் போது பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.1,280.18 கோடியும் வழங்க உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வருவதற்காகக் காத்திராமல், பேரிடர் ஏற்பட்ட உடன் அமைச்சகங்களைச் சேர்ந்த மத்தியக் குழுக்களை மத்திய அரசு உடனே அனுப்பியது. 2020-21 நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 28 மாநிலங்களுக்கு இதுவரை ரூ.19,036.43 கோடியையும், தேசிய பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4,409.71 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.