ETV Bharat / city

வீடு தேடிவரும் சொட்டு மருந்து - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jan 31, 2021, 2:02 PM IST

சென்னை: இன்று (ஜன .31)போலியோ சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு அடுத்த மூன்று நாள்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Health Secretary Radhakrishnan
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ 70.36 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட இருக்கிறோம். அதில் 65 லட்சம் குழந்தைகளுக்கு இன்று(ஜன.31) போட வேண்டும் என்பது இலக்கு. தமிழ்நாட்டில் 17 ஆண்டுகளாக போலியோ இல்லை, அதேபோல இந்தியாவில் 10 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாமல் இருக்கிறது. அதற்காக பொதுமக்கள் சொட்டு மருந்து போடாமல் இருக்க கூடாது.

95 விழுக்காடு குழந்தைகளுக்கு இன்று(ஜன.31) போலியோ சொட்டு மருந்து போடப்படும் மீதம் உள்ளவர்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு வீடு வீடாக சென்று போட இருக்கிறோம். காய்ச்சல் மற்றும் வேறு நோய் உள்ள குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போடக்கூடாது.

ஏற்கனவே சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகளும் இன்று(ஜன.31) போட்டுக்கொள்ள வேண்டும். 43,051 சொட்டு மருந்து மையங்கள், 40,399 நிரந்தர மையங்கள், பிராட்வே போன்ற பேருந்து நிலையம், ரயில்வே, உள்ளிட்ட இடங்களில் போடப்பட்டுள்ள 1,652 மையங்கள், 1,000 நடமாடும் மையங்கள் தொடங்கி இருக்கிறோம்.

இதற்காக 1,83,145 நபர்கள் பணி மேற்கொள்கிறார்கள், 2,508 வாகனங்கள் ஈடுபடுத்தி இருக்கிறோம். மேலும், போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு செங்கல் சூளை போன்ற இடங்களில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் அங்கெல்லாம் கவனக் குறைவாக இருக்கிறார்கள்.

கரோனா தடுப்பூசி போட வருபவர்களும் நோய்த்தொற்று இருந்தால் போடக்கூடாது. தடுப்பூசி என்பது மிக முக்கியமான மைல்கல், அதனால் வதந்தியை பொதுமக்கள் நம்பக்கூடாது. 1,05,543 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறோம். முன்கள பணியாளர்களுக்கு நாளையிலிருந்து(பிப்.1) தடுப்பூசி போட இருக்கிறோம்.

தேவைக்கு ஏற்ப தடுப்பூசி போடும் நேரத்தினை அதிகரிக்க இருக்கிறோம். மேலும், 150 ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மேலுள்ள தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இதுவரையும் எந்த தொற்று ஏற்படவில்லை இரண்டு தடுப்பூசியும் பாதுகாப்பான தடுப்பூசி தான் அதனை பாதுகாப்பான முறையில் போட்டு வருகிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தடுப்பூசி என்று வந்தால் பல்வேறு விதமான வதந்திகள் வர தான் செய்யும் - அமைச்சர் விஜயபாஸ்கர் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.