சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி சசிகலா அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை பயன்படுத்தி கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல், விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் புகார் மனுவை அளித்தனர். அதில், “சசிகலா தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவின் கொடியையும், அதிமுகவின் பொதுச் செயலாளர் பெயரையும் தவறான எண்ணத்தோடு பயன்படுத்தி வருகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் சசிகலா
இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக என்ற கட்சி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்று வருகிறது. தொண்டர்களிடையே ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சசிகலா தவறான எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கக்கூடிய ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர்களிடம் தான் கட்சிக்கு உரிமை உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கட்சியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தவே சசிகலா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்” என்றார்.
முன்னதாக ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும்போது மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாத நிலை இருந்துள்ளது. மேலும், புகார் அளித்த பிறகு புகாரைப் பெற்றதற்கான சிஎஸ்ஆர் எனப்படும் ஒப்புகை சீட்டை கூட தராமல் இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அம்மா உணவகத்தை மூட நினைக்கும் திமுக
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலை என்ற கேள்வியை அவர் எழுப்பினார். திமுகவும், சசிகலாவும் கைகோர்த்து அதிமுகவில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் சாமானிய மக்களுக்கும் காவல் துறைக்கும் உரிய மரியாதையும் பாதுகாப்பும் இல்லை. அதிமுக ஆட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, திமுகவினரை பணியில் அமர்த்த திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. அம்மா உணவகத்தை மூடலாம் என்று திமுக அரசு நினைத்தால் அதற்கான தகுந்த நடவடிக்கையை அதிமுக எடுக்கும்” என்றார்.
இதையும் படிங்க: திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு