பொங்கல் பரிசு தொகுப்பு - அரசை குறை கூறுவதா? - அமைச்சர் சக்கரபாணி

author img

By

Published : Jan 12, 2022, 6:43 AM IST

அமைச்சர் சக்கரபாணி

பொங்கல் பரிசு பொருட்கள் விவகாரத்தில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆளும் அரசைக் குறை கூறும் நோக்கத்தில், அதிமுக தவறான கருத்துக்களை பொதுமக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இலவச பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதில் அரசின் செயல்பாடு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அரசைக் குறைக் கூறுவதா?

அப்போது பேசிய அவர், ஆளும் அரசை குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே எதிர்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் அறிக்கையின் வாயிலாக தவறான கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார். 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

ஆனால், அதிமுக ஆட்சியில் 2012ஆம் ஆண்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமல் நிறுத்தி விட்டார்கள். அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பொருட்கள் சரியான முறையில் அதிமுக அரசு வழங்கவில்லை.

பொய் பிரச்சாரம்

கடும் நிதி நெருக்கடியிலும் தேர்தல் வாக்குறுதியான கரோனா நிவாரண நிதி ரூ.4,000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. 21 வகையான பொங்கல் தொகுப்பின் மதிப்பு ரூ.618.

முறைகேடுகளின் மொத்த உருவம் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ். அதிமுகவினர் பொய் பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். பரிசுப் பொருட்கள் வழங்குவதில் அதிமுக ஆட்சியில்தான் ஊழல் தலைவிரித்து ஆடியது.

ஆதாரம் இருந்தால் என்னை சந்தித்து ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ் கேள்வி கேட்கட்டும் நான் பதில் சொல்லத் தயாராக உள்ளேன். தற்போது வழங்கப்பட்டு வரும் பரிசு பொருட்களில் எந்த முறைகேடுகளும் இல்லை.

புகார் அளிக்கலாம்

பொங்கல் பரிசு தொகுப்புகள் முறைப்படி பொது மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பரிசுப்பொருட்கள் பொது மக்களுக்குச் சரியான முறையில் வழங்காத நியாயவிலைக்கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

பரிசுத் தொகுப்பில் பை இல்லை என்றும் அதில் பற்றாக்குறை இருப்பதாகவும் புகார் வந்துள்ளது. அதனை சரி செய்யும் வகையில் 95 விழுக்காடு வரை அனைத்து நியாய விலை கடைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான பை வழங்கப்பட்டுள்ளது.

பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக 1800-599-3540 என்ற புகார் எண்ணிலோ அல்லது பொதுமக்கள் என்னுடைய தனிப்பட்ட தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முறைகேடு இல்லை

இது நேர்மையான அரசு, தூய்மையான அரசு. வெளிப்படைத் தன்மையோடு டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. டெண்டருக்கு என்று ஒரு கமிட்டி இருக்கிறது. அதற்கு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆணையர் தலைவராக, மேலாண்மை இயக்குநர் ஒரு உறுப்பினர், நிதித்துறையின் துணைச் செயலாளர் ஆகியோர் கொண்ட குழுதான் இது. இவர்கள்தான், இந்தப் பொருட்களை வாங்குவது போன்ற முடிவுகளை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

சந்திக்க தயார்

கடந்த காலத்தைப் போல, இரண்டு, மூன்று பேர்களுக்கு மட்டும் டெண்டர் கொடுப்பது இந்த ஆட்சியில் இல்லை. இப்போது ஒரு டெண்டரில் 15 முதல் 18 பேர் கலந்துகொள்கிறார்கள். இதில் அரசாங்கமோ, அமைச்சர்களோ யாருடைய தலையீடும் இல்லை. எங்கு புகார் கொடுத்தாலும், அதை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

இது வரைக்கும் 10 லோடு தரமற்ற பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து ரூ. 33 விலை கொடுத்து பொங்கலுல்கான கரும்பு வாங்கியுள்ளோம்" என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கிராவல் மண் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு: மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.