பொங்கல் தொகுப்பு கரும்பில் முறைகேடு? - அரசு கவனிக்குமா...!

author img

By

Published : Jan 15, 2022, 6:45 PM IST

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட கரும்பில் முறைகேடு நடைபெற்றுள்ளதா?

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட கரும்பில் முறைகேடு நடைபெற்றுள்ளதாவும், முதலமைச்சர் ஸ்டாலின் இதனை கவனிப்பாரா என்றும் கரும்பு விவசாயிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சென்னை: இது குறித்து ஈடிவி பாரத் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கள ஆய்வுகளை மேற்கொண்டு செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆதாரத்தோடு அடுத்தபடியான கரும்பு விற்பனையில் முறைகேடு வெளிப்படையாகத் தெரியவருகிறது. இது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்...

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 11ஆம் தேதியன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது,
"விவசாயிகளுக்கு 33 ரூபாய்க்கு கரும்பு கொடுக்க வேண்டும். அதில் இடைத்தரகர்கள் யாரும் வரக்கூடாது என்று அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.

ஸ்டாலின் அறிவித்ததுபோல ரூ.33-க்கு யாரும் கேட்கவில்லை

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 தரமான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச் செல்வதை நாங்களே பார்க்கிறோம். 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதற்கான பொருள்கள் கொள்முதல்செய்வதில் எந்த முறைகேடும் இல்லை, குளறுபடிகளும் இல்லை" என்று ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தார்.

தற்போது கோயம்பேடு சந்தையில் கரும்பின் விலை 20 கரும்பு 250 முதல் 300 ரூபாய்க்கும், பொங்கல் அன்றும், பொங்கலுக்கு முன் தினமும் 20 கரும்பு 100 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் அண்ணாநகர் பகுதியில் ஜோடி கரும்பு 80 ரூபாய்க்கும், கொரட்டூர் பகுதியில் ஜோடி கரும்பு 60 ரூபாய்க்கும், புரசைவாக்கம் பகுதியில் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இது குறித்து திருச்சி கரும்பு விவசாயி கலியமூர்த்தி கூறுகையில், "ஸ்டாலின் அறிவித்ததுபோல 33 ரூபாய்க்கு யாரும் கரும்பை கேட்கவில்லை. 15 ரூபாய் 16 ரூபாய்தான் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் இங்கே ஒரு கட்டு கரும்பின் விலை (ஒரு கட்டுக்கு 10 கரும்புகள்) 200 முதல் 250 ரூபாய் விற்கிறோம். அதாவது கணு தள்ளி பருமனாக இருந்தால் ரூபாய் 250-க்குப் போகிறது.

கரும்பு விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம்

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் கொள்முதல் விலையாக அரசு விலை நிர்ணயம்செய்துள்ளது. கூட்டுறவு அலுவலர்கள் நேரடியாக விவசாயிகளை அணுகி அரசு நிர்ணயித்த விலைக்கு கரும்பினை வாங்காமல் இடைத்தரகர்கள் மூலம் கரும்புகளை வாங்குகின்றனர்.

எனவே இடைத்தரகர்கள், அலுவலர்கள் தங்களுக்கான தரகுத் தொகை போக கரும்பு ஒன்றுக்கு 13 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்குக் கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல் கட்டு ஒன்றுக்கு 230 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது" என்றார்.

இதற்கிடையில் அரசு வாங்கும் விலைக்கே தனியார் வியாபாரிகளும் கரும்பினை வாங்குவதால் வெளிச்சந்தையிலும் போதிய லாபத்துடன் விற்க முடியாமல் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர்.

இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் விவசாயிகள்

இது குறித்து விவசாயி லட்சுமண பாண்டியன் நம்மிடம் பேசுகையில், "எங்கள் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிட்டுள்ளோம். கடந்தாண்டு மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்தாண்டு மழை இல்லாவிட்டாலும்கூட நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை. அரசு ஒரு கரும்புக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம்செய்துள்ளது.

ஆனால் இடைத்தரகர்கள் மூலம் கரும்பு வாங்கப்படுவதால் எங்களுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. தற்போது கரும்பு கட்டு ஒன்றுக்கு 230 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். இதே விலைக்குதான் தனியார் வியாபாரிகளும் வாங்குகின்றனர்.

ஒரு ஏக்கருக்கு கரும்புப் பயிரிட 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் ஒரு ஏக்கரில் 600 கட்டுக்கும் குறைவாகவே கரும்பு விளைகிறது. போதிய லாபம் கிடைப்பதில்லை" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

வெளிப்படையாகவே நடக்கும் முறைகேடும், ஊழலும்!

2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முக்கால்வாசி பேருக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் ஒரு கரும்பின் விலை 33 ரூபாய் விலைக்கு கரும்பு விவசாயிகளிடம் வாங்கப்படுகிறது என்று அரசுத் தரப்பில் சொல்கின்றனர்.

இந்த நிலையில், அரசின் இக்கூற்றை விவசாயிகள் முற்றிலுமாக மறுக்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் இரண்டு கரும்புகள் 60 ரூபாய் வரை வாங்கியுள்ளனர். சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கரும்பின் விலை ஜோடி 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இப்படியிருக்க அரசு சார்பில் ஒவ்வொரு கரும்பின் விலையை மட்டும் 33 ரூபாய்க்கு எந்த விவசாயிடம் வாங்கியுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும் ஒரு கரும்பிற்கு ஒரு ரூபாய் விலை அதிகமாக விற்றால்கூட 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற கரும்புக்கு 2.15 கோடி ரூபாய் பணம் கிடைத்திருக்கும்.

கோடிக்கணக்கில் முறைகேடு - வெட்டவெளிச்சம்!

ஆனால் இந்தப் பணம் யாருக்கு கிடைக்கும் என்பது சந்தேகமாக உள்ளது. தற்போது கோயம்பேடு சந்தையில் 20 கரும்பு 300 ரூபாய் விற்கப்படுகிறது என்று எடுத்துக்கொண்டால்கூட ஒரு கரும்பின் விலை 15 ரூபாய்க்கு மக்களுக்கு கிடைக்கிறது.

ஆனால் அரசு சார்பில் வழங்குகின்ற கரும்பின் விலை மட்டும் 33 ரூபாய் என்று சொல்லப்படுவதால் ஏன் ஒரு கரும்பை 15 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கும்போது அரசு முப்பத்து மூன்று ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 தரமான பொருள்கள் வழங்கப்படுகிறது என்ற நேரத்தில், ஒரு கரும்பில் மட்டுமே கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கிறது.

ஒரு பொருளுக்கே கோடி... எதிர்க்கட்சிகள் மவுனம் ஏன்?

மேலும் தனியாரிடம் ஒரு கரும்பு 30 ரூபாய் அல்லது 25 ரூபாய்க்குப் பொதுமக்கள் கரும்பு வாங்கி உள்ள நிலையில், அரசு மட்டும் ஒரு கரும்பை விவசாயிகளிடம் முப்பத்து மூன்று ரூபாய்க்கு வாங்கியுள்ளது என்று தெரிவிக்கும்போது இதில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரு பொருளுக்கே கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ள நிலையில், மீதியுள்ள 20 பொருள்களின் தரம் குறித்தும் அதனுடைய விலை குறித்தும் ஆராய வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதுவரை எந்த எதிர்க்கட்சிகளும் கேட்கவில்லை என்ற வேதனை விவசாயிகள் மத்தியில் உள்ளது.

இதையும் படிங்க: அரசு நிர்ணயித்துள்ள விலை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கிறதா? - நேரடி கள ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.