கருமுட்டை விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!

author img

By

Published : Aug 5, 2022, 3:26 PM IST

கருமுட்டை விவகாரம்

சட்டவிரோதமாக கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு அலுவலர்கள் ‘சீலும்’ வைத்தனர்.

இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, விதிமீறல் இருப்பதாக கண்டறிந்தால் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான போதிய காரணங்களை அரசு தெரிவிக்கவில்லை எனக்கூறி, தமிழ்நாடு அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குநர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், பொது நலன் கருதி விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனையை சீல் வைக்க சட்டத்தில் இடமுள்ளது எனவும்,

முன்கூட்டி நோட்டீஸ் அனுப்ப அவசியமில்லை எனவும், சிறுமியிடம் ஒன்பது முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக குற்றவழக்கும் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

கடந்த 35 ஆண்டுகளாக எந்த புகாருக்கும் இடமில்லாத வகையில் மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில், பத்திரிகை செய்தி அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி தங்கள் தரப்பு விளக்கத்தைக்கேட்க வேண்டியதில்லை என்ற போதும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் உத்தரவில், விதிகளுக்கு முரணாக செயல்படுவதால் பொதுநலன் கருதி மருத்துவமனையின் பதிவு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கூறி அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை எனக்கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி புறக்கணித்திருக்கக் கூடாது எனக் கூறிய நீதிபதிகள், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ‘மார்க்’ நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.