'தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'

author img

By

Published : Oct 5, 2022, 7:29 PM IST

Etv Bharat

தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், 'கடந்த 03.10.2022அன்று தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்திருந்தார். இதற்கு பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒரு வெற்று அறிக்கையினை வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் வெற்று விளம்பரத்தை அரங்கேற்றியுள்ளார்.

மேலும், முதற்கட்டமாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 1 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தவறானது. இத்துறையின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 17,775 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எப்பொழுதுமே ஆதாரமின்றி பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் வைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றிய அடிப்படை புரிதல் ஏதும் இல்லாமல் அறிக்கை விடுகிறார். நிரந்தரக் கட்டடம் கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தான் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் என்று கூறுவர். ஆனாலும், அவையும் தற்காலிகமாக கொள்முதல் செய்பவை தான். நெல் கொள்முதலைக் குறைத்திட வேண்டும் என்று அரசு கூறுவதாக வடிகட்டிய பொய்யைக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த விவசாயிகளுக்கான இவ்வரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏற்கெனவே 26.09.2022அன்று நடந்த ஆய்வின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து 27.09.2022 அன்று நானும் விரிவான அறிவுரைகளை வேளாண்துறை உயர் அலுவலர்களுக்கு வழங்கியதோடு நிலவரங்களைத்தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மேலும், வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கண்காணிக்க 5,000 வேளாண் அலுவலர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாகுபடி பரப்பு அதிகரித்த அதே வேளையில் கூட்டுறவு வேளாண் கடன்கள் வழங்கப்படவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இந்த ஆண்டில் மட்டுமே 6,04,060 விவசாயிகளுக்கு ரூ.4,566.13 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூ.603.50 கோடி அளவிற்கு 87,768 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சியில் 4,87,640 விவசாயிகளுக்கு 3814.19 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 63,398 விவசாயிகளுக்கு 427.05 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், எங்கள் அரசு பொறுப்பேற்றபின் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 98,968 புதிய விவசாயிகள் வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். இவர்களில் 77,005 வேளாண் பெருங்குடி மக்களுக்கு ரூ.523.67 கோடி அளவிற்கு விவசாயக் கடன்கள் பெற்றுள்ளனர்.

இதனால் விவசாயத்திற்காக தனியார் வங்கிகளிடமிருந்து அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் சூழ்நிலை ஏதும் உருவாகவில்லை. சென்ற ஆண்டைவிட கூடுதலாக ரூ.217.26 கோடி அளவில் 29,790 விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

போலி விவசாயியாக நாடகமாடியவருக்கு இந்த உண்மை நிலவரம் கூட தெரியாமல் யாரோ எழுதிகொடுத்ததை படித்துப்பார்க்காமல் அவசர கதியில் அறிக்கையாக வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி 2011ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 3.428 லட்சம் ஏக்கர் தான் பயிரிடப்பட்டது என்பது ஏனோ அவருக்குப் புரியவில்லை.

கடந்த 25.09.2022 முதல் பாதிப்படைந்த டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் நேரடியாக களப்பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நெல் பரப்பினை கணக்கெடுத்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, இவ்வரசின் சீரிய முயற்சியினால் எடுத்த நடவடிக்கையின் காரணமாக விவசாயிகள் போராட்டம் எதுவும் நடைபெறவில்லை' என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் திமுக அரசு - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.