முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியவருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

author img

By

Published : May 11, 2022, 7:06 PM IST

உயர் நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் ஸ்டாலினை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்தவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடியை சேர்ந்த செந்தில்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்து பரப்பியதாக, ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ரவி என்பவர் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி செந்தில் குமார் தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து முன்ஜாமீன்கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் குமார் மனுதாக்கல் செய்திருந்தார்.

தான் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாக அளிக்கப்பட்டப் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி தமிழ்நாடு முதலமைச்சரை தரம் தாழ்ந்தும், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று நீதிபதி, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்யும் நடவடிக்கையில் ஆரணி தாலுகா காவல் நிலையத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.