மாணவர்களை பள்ளிகளில் இருந்து நீக்குவதா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு குழந்தைகள் ஆர்வலர்கள் கடிதம்

author img

By

Published : May 10, 2022, 10:44 PM IST

Children

ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை தண்டிக்காமல், அரவணைத்து சரி செய்ய வேண்டும் என குழந்தைகள் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆன்ட்ரூஸ் ஜேசுராஜ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாணவர்கள் வகுப்பறைகளில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுச் சான்றிதழ்களில் காரணம் குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று நீங்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாண்டு கால பொதுமுடக்கத்தில் சமூகமயமாதலுக்கு வாய்ப்பில்லாமல், கட்டுப்பாடு இல்லாமல், சரியான வழிகாட்டல் இல்லாமல் இருந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்திருக்கின்றனர்.

இந்த சூழலில் மாணவர்கள் வன்முறையில் இறங்குவதும், ஆசிரியர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதும் வேதனையான நிகழ்வுகள் மட்டுமல்ல, கண்டிப்பாக களையப்படவேண்டிய ஒன்று. ஆனால் அவர்களை பள்ளியை விட்டு நீக்குவது, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும். அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுப்பதற்கான சூழல் குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு வழிகாட்ட தகுதியும், அனுபவமும் உள்ள மன நல ஆலோசகர்கள் இல்லை.

வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்களின் மற்ற சூழ்நிலைகளை சரிப்படுத்தாமல், பள்ளி மாணவர்களை தண்டிப்போம் என கூறுவது சரியல்ல. அவர்களை நம்மோடு வைத்து அரவணைத்து சரி செய்யாமல், வெளியில் விரட்டுவது இச்சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'தமிழ்நாடு அரசின் நோக்கம் குற்றத்தைத் தடுப்பதே' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.