'செஸ் ஒலிம்பியாட் போட்டிகளால் எங்களுக்கு எந்தப்பலனும் இல்லை' - மாமல்லபுரம் வியாபாரிகள் வேதனை

author img

By

Published : Aug 1, 2022, 10:20 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை- மாமல்லபுரம் வியாபாரிகள் வேதனை

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் களை கட்டியுள்ள அதே நேரத்தில், மாமல்லபுரத்தில் வசிக்கும் தங்களுக்கு, இந்த விளையாட்டுப் போட்டிகளால் எந்த விதமான பயனும் கிடையாது என்று, வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில், 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அரசு பலவிதமான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாமல்லபுரத்தை வண்ணங்களால் அழகுபடுத்தி பேருந்து நிறுத்தங்கள் பளபளக்கின்றன. செஸ் போட்டிகளை நினைவுபடுத்தும் விதமாக பல இடங்களில் படங்கள் வரையப்பட்டுள்ளன.

குறைந்த சுற்றுலாப் பயணிகள்: ஆனால் அதே நேரத்தில், மாமல்லபுரத்திற்கு வழக்கமாக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது கண்கூடாகத்தெரிகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும் பகுதிகளான ஐந்து ரதம், அர்ஜுனன் தபஸ், வெண்ணெய் உருண்டை கல், கடற்கரைக் கோயில், கடைத்தெருக்கள் என்று எல்லா இடங்களிலும் சொற்ப எண்ணிக்கையிலேயே சுற்றுலாப் பயணிகள் தென்படுகின்றனர்.

நிரம்பி வழியும் வாகன நிறுத்தும் இடங்களும் காற்றாடுகின்றன. செஸ் போட்டிகளால் நிலவும் கெடுபிடிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டாய கட்டணம்: மாமல்லபுரம் பகுதிக்குள் வசிக்கும் வியாபாரிகளுக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கும், இந்தப் போட்டிகளால் எந்த விதமான பயனும் இல்லை என்று வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர். வியாபாரம் குறைந்ததோடு இல்லாமல், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் காரணமாக தங்கள் அன்றாட வியாபாரத்தில் பல இன்னல்களை சந்திப்பதாகவும் சிறு வியாபாரிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

உதாரணத்திற்கு, உணவுப் பண்டங்கள், இளநீர், டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை விற்று அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் சிறு வியாபாரிகளுக்கு, 400 முதல் 500 ரூபாய் கட்டாய கட்டணமாகப்பெற்று தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களைப் பெறாத கடைகளுக்குச்சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடைகளுக்கு வண்ணம் தீட்டி அதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திலிருந்து சில பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பூஞ்சேரியில் நடைபெறும் இந்தப்போட்டிகளுக்காக வருகை புரியும் வெளிநாட்டினர், மாமல்லபுரத்திற்கு உள்ளே வரவே இல்லை என்கின்றனர்.

ஆனால், அவர்களைக் காரணம் காட்டி தங்களுக்கு கெடுபிடிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, வழக்கமாக வரும் சுற்றுலாப்பயணிகள் கூட தற்போது சில நாட்களாக வருவதில்லை என்கின்றனர், வியாபாரிகள். வாடகை வாகனங்கள் ஓட்டுவோரும் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்களின் சிரமம்: சுற்றுலா நட்பு ஆட்டோக்கள் என்ற பெயரில் 25 ஆட்டோக்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து களத்தில் இறக்கிவிட்டுள்ளது, மாநில அரசு நிர்வாகம். ஆனால், தங்களுக்கு வழக்கமாக வரும் வருமானமும் வரவில்லை என்று வேதனைப்படுகின்றனர், அந்த ஆட்டோக்களை ஓட்டுபவர்கள்.

'சுற்றுலா நட்பு ஆட்டோ' என்றால், பெரும்பாலானோர் இலவச ஆட்டோ என்று நினைத்தே தங்களை அணுகுவதாகவும் நியாயமான கட்டணத்தைத்தெரிவித்தால்கூட விலகிச்செல்வதாகவும் ஆதங்கப்படுகின்றனர். இவை எல்லாவற்றையும் தாண்டி, சர்வதேச செஸ் போட்டிகளை கண்டு களிக்க வரும் பார்வையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஏமாற்றமடைந்த பார்வையாளர்கள்: இதில் எந்தவிதமான ஒழுங்குமுறையும் பின்பற்றப்படவில்லை என்று கொதிக்கின்றனர், வெளியூரிலிருந்து போட்டிகளைப் பார்வையிட வந்தவர்கள். பார்வையாளர்களும் செய்தியாளர்களும், தனியார் இணையதளத்தில் முன்பே விண்ணப்பித்து அனுமதி அட்டை பெற்றிருந்தால் மட்டுமே போட்டிகளைப் பார்வையிட உள்ளே அனுமதிக்கப்படுவர் என்று தடுக்கப்படுகின்றனர்.

பார்வையாளர்களுக்கு இதுகுறித்த எந்த முன்னறிவிப்பும் இல்லாததால் கட்டணம் செலுத்திப்பார்வையிடலாம் என்று வந்து ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் கூட, டிக்கெட் வாங்கி பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டு களிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில், செஸ் ஆர்வலர்கள் இந்தப்போட்டிகளை பார்வையிட முடியாதது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நெடுந்தொலைவில் உள்ள வெளியூர்களிலிருந்து வரும் பார்வையாளர்கள் படும் சிரமங்கள் கணக்கில் அடங்காதவை. மொத்தத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறுவது ஒருபுறம் பெருமை தான் என்றாலும், சாமானியர்களுக்கு இதனால் சிறிதளவும் எந்தப்பயனும் ஏற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை- மாமல்லபுரம் வியாபாரிகள் வேதனை

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகளின் தொடர் வெற்றி: பயிற்சியாளரின் பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.