கொள்ளையடிக்கப்பட்ட அரும்பாக்கம் வங்கி நகைகள் உருக்கப்பட்டதா.. போலீசார் விசாரணை

author img

By

Published : Aug 16, 2022, 12:17 PM IST

Etv Bharat

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ உருக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் கைதான கொள்ளை கும்பல் தலைவன் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள பெட் பேங்க் கோல்டு லோன் வங்கியில் கடந்த 13ஆம் தேதி, மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கத்திமுனையில் கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இக்கொள்ளையில் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள் சூர்யா, பாலாஜி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

இக்கொள்ளை கும்பலில் தொடர்புடையவர்களை 11 தனிப்படைகள் அமைத்து தேடிவந்த நிலையில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி, சந்தோஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், இதற்கு மூளையாக செயல்பட்ட முருகன் கொரட்டூர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இவர்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்பிலான 18 கிலோ தங்க நகைகள், 2 நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் மற்றொரு கொள்ளையன் சூர்யா என்பவரும் வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகன் தங்களுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் மற்றும் ஜிம் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து பல நாட்களாக திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக, வங்கியில் இருந்து நகையை கொள்ளையடித்து தப்பி செல்வதற்காக சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் வெளியில் இருந்து மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். நகையை கொள்ளையடித்தவுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேட்டிற்கு சென்று கார் மூலமாக பல்லாவரம் பகுதிக்கு சென்று அங்கு ஒரு லாட்ஜில் நகையை பிரித்துள்ளனர்.

கைதான கொள்ளையர்கள்
கைதான கொள்ளையர்கள்

குறிப்பாக, லாட்ஜில் ஒரு கிலோ நகையை உருக்கும்போது அதிகப்படியான புகை வெளியேறியதால், கொள்ளையர்கள் பயந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அனைவரும் பிரிந்து விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கொள்ளைபோன 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீதமுள்ள 14 கிலோ தங்க நகைகள் தொடர்பாக முக்கிய தலைவனான முருகனிடம் விசாரணை நடத்தியபோது, சூர்யாவிடம் நகைகளை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதேபோல சூர்யாவும் தான் முருகனிடம் நகையை கொடுத்துள்ளதாகக் கூறி வருவதால், போலீசார் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கோயம்புத்தூரை சேர்ந்த நகை கடை உரிமையாளரின் உறவினர் ஒருவர் இந்த கொள்ளை கும்பலுக்கு உதவி இருப்பதால் அவரிடம் மீதமுள்ள தங்கம் கொடுக்கப்பட்டுள்ளதா? என தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.