ETV Bharat / city

'மார்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை.. அறத்தை காலில் போட்டு மிதித்த கர்நாடகா..'

author img

By

Published : Jul 3, 2021, 4:49 PM IST

Updated : Jul 3, 2021, 5:00 PM IST

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டிய கர்நாடக அரசு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani
Anbumani

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மிகப்பெரிய அளவில் புதிய அணை கட்டி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கர்நாடாக அரசின் மற்றொரு சூழ்ச்சி

தென்பெண்ணை ஆற்றுச் சிக்கல் தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணையில் இருக்கும் போது கர்நாடகம் தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்று நீர் பிரச்னையில் கர்நாடக அரசு எவ்வாறு அனைத்து விதிகளையும், ஒப்பந்தங்களையும், அறத்தையும் காலில் போட்டு மிதித்து விட்டு சுயநலத்துடன் நடந்து கொண்டதோ, அதே போல் தான் தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே புதிய அணை கட்டுவதிலும் நடந்து கொண்டது.

கர்நாடக மாநிலம் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோள் கிராமத்தில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே 50 மீட்டர் உயரம், 430 மீட்டர் நீளத்திற்கு புதிய அணை கட்டும் பணியை அம்மாநில அரசு கடந்த 2012ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது.

Anbumani
Anbumani

உச்சநீதிமன்றத்தில் மனு

அப்போதே பாமகவும், உழவர் அமைப்புகளும் அதைக் கண்டித்து கடுமையான போராட்டங்களை நடத்தியதன் பயனாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அதனால் உழவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மற்றொருபுறம், மார்க்கண்டேய நதியில் அணை கட்ட தடைவிதிக்க வேண்டும்; பெண்ணையாற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை 2019ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தென்பெண்ணையாற்று சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்குமாறு மத்திய அரசை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி தமிழ்நாடு அரசும் மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.

தீர்ப்பாயம் அமைப்பதில் காலதாமதம்

ஆனால், தீர்ப்பாயம் அமைப்பதில் மத்திய அரசு தேவையின்றி தாமதம் செய்தது. தீர்ப்பாயம் அமைக்கக் கோரி மத்திய அரசிடம் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்த போதே, மார்க்கண்டேய நதியில் அணை கட்டும் பணியில் 70 விழுக்காட்டை கர்நாடக அரசு முடித்து விட்டது.

உடனடியாக தீர்ப்பாயம் அமைத்திருந்தால், அதற்குரிய நீதிமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி அணை கட்டுமானத்திற்கு தடை விதித்திருக்க முடியும். ஆனால், தீர்ப்பாயத்தை அமைப்பதற்கு பதிலாக பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைத்தது.

Anbumani
Anbumani

இரு மாநிலங்களுக்கு இடையே இரு முறை பேச்சு நடத்திய மத்திய அரசு குழு, அந்தப் பேச்சுகளில் உடன்பாடு எட்டப்படாததால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண நடுவர் மன்றத்தை அமைக்கும்படி கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.

நினைத்ததை சாதித்த கர்நாடகா

அப்போதே நடுவர் மன்றம் அமைத்திருந்தால் கூட அணையை தடுத்திருக்க முடியும். ஆனால், கடந்த ஆண்டு இறுதி வரை நடுவர் மன்றம் அமைக்கப்படாத நிலையில், அதையும், கரோனா சூழலையும் பயன்படுத்திக் கொண்டு கர்நாடகம் அணை கட்டி முடித்துவிட்டது.

தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் தோன்றினாலும் அம்மாநிலத்தில் மிகக் குறைந்த தொலைவுக்கு மட்டுமே ஓடுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஓடி கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்பெண்ணையின் நீர் ஆதாரமாக திகழ்வது மார்க்கண்டேய நதி தான்.

இப்போது அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டு விட்டது. அதில் 165 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்க முடியும். அரை டி.எம்.சி மட்டும் தான் தண்ணீரைத் தேக்க முடியும் என்று கூறப்பட்டாலும் 2 டிஎம்சி வரை நீரைத் தேக்கலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். 165 அடி உயர அணை நிரம்பினால் தான் மார்க்கண்டேய ஆற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து தென்பெண்ணையாற்றில் கலக்கும்.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்

இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் தமிழ்நாட்டில், தென்பெண்ணை ஆற்றை பாசன ஆதாரமாக நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும்; இம்மாவட்டங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

Anbumani
Anbumani

1892ஆம் ஆண்டில் சென்னை - மைசூரு மாகாணங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆறும் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி முதல்மடை பாசனப் பகுதிகளில் எதை செய்வதானாலும், கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும்.

ஆனால், அதை மதிக்காமல் கர்நாடகம் தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது நடுவர் மன்றத்தை அவமதிக்கும் செயல். இது இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும். இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

நடுவர் மன்றத்திலும் இந்த சிக்கலை எழுப்பி சட்டவிரோதமாக, அனுமதியின்றி கட்டப்பட்ட அணையை அகற்ற ஆணையிடும்படி வலியுறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்' - சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்

Last Updated :Jul 3, 2021, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.