ஒரு அரசு பேருந்து ஒரு கிமீ ஓடினால் ரூ.60 இழப்பு!

author img

By

Published : Aug 9, 2021, 8:05 PM IST

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஒரு அரசு பேருந்து ஒரு கிலோமீட்டர் ஓடினால் ரூ.60 இழப்பு ஏற்படும் என வெள்ளை அறிக்கையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

சென்னை: தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

இதுகுறித்து பேசிய நிதியமைச்சர், "மின்சார வாரியத்தின் கடன் ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. உலக பொருளாதார நெருக்கடி வந்தால் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிகம் பாதிக்கும். இதுதான் தற்போதய நிலை. 2021-22இல் ஒன்றிய அரசிடம் இருந்து வர வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பாக்கி ரூ.20,033 கோடியாக உள்ளது.

வரி விதிப்பை அதிகரிக்காமல், மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரித்துள்ளது முந்தைய அதிமுக அரசு. யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமொ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கரோனா தொற்று ஆகியவையே பொருளாதார சுணக்கத்திற்கு காரணம். சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு லட்சம் கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலத்தில் நடத்தாததால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையில் 31 ரூபாய் 50 காசுகள் ஒன்றிய அரசுக்குதான் வரியாக செல்கிறது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. அதிமுக அரசின் முறையற்ற நிர்வாகத்தால், அரசு பேருந்து ஒரு கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59.15 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.