சென்னையில் கொலு பொம்மை, கலை நயமிக்க மண்பாண்டங்கள் கண்காட்சி...

author img

By

Published : Sep 22, 2022, 11:02 AM IST

Etv Bharat

சென்னையில் மாபெரும் கொலு பொம்மை மற்றும் கலை நயமிக்க மண்பாண்டங்கள் கண்காட்சி நடைபெற்றது.

சென்னை: தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், சென்னை குறளகம் கட்டடத்தில் உள்ள கதரங்காடியின் தரைத் தளத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், கைவினைஞர்களுக்கு நல்லதொரு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன், கூடுதல் வருவாய் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு கொலு பொம்மை கண்காட்சியுடன் கலைநயமிக்க, மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களின் விற்பனை கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

இதன் துவக்க விழாவில், சிறுதானியங்களான தினை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வரகு மற்றும் மூங்கில் அரிசி உள்ளிட்டவற்றை வேளாண் உற்பத்தி குழுக்களிடமிருந்து கொள்முதல் செய்தனர். பின், "காதி கோல்டு" என்ற பெயரில் ½ கிலோ கொள்ளளவு கொண்ட பெட் பாட்டில்களில் நிரப்பி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதோடு சிவகங்கை மாவட்டம், கண்டணூர் அலகில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய இரக “காதி திரவ சலவை சோப்பு” என்னும் புதிய சலவை சோப்பு இரகம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் வண்ணமிகு நிறங்களில் காண்போரைக் கவரும் வண்ணம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தெய்வீக சிலைகள், மண்பொம்மைகள், மரப்பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகள், கற்சிற்பங்கள், மற்றும் மார்பிள் சிற்பங்கள், அரசு மனநலக்காப்பகத்தில் உள்ள உள் நோயாளிகளால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், பூம்புகார் நிறுவனத்தின் கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

பொருட்களுக்காக 27 அரங்குகளும், மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள் மற்றும் PMEGP பயனாளிகளால் தயாரிக்கப்படும் கலைநயமிக்க டெரகோட்டா வகை பொம்மைகள், மதிப்புக் கூட்டப்பட்ட மண்பாண்டங்கள் மற்றும் பீங்கான் பொருட்களுக்கென 8 அரங்குகளும் சேர்த்து மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பட்டது.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தை சார்ந்த கோத்தர் இன பழங்குடியினரால் உற்பத்தி செய்யப்படும் கலைநயமிக்க மண்பாண்டங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்க்கான புதிய வகை பொம்மைகளான சப்தரிஷிகள், கிருஷ்ணர் வனபோஜனம், வீரராகவ உற்சவ பெருமாள், சொர்ண ஆகாச பைரவர் மற்றும் காவேரி செட் போன்ற புதிய வகை பொம்மைகள் பிரத்யேகமாக இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற ஏழை எளிய கிராமப்புற கைவினைஞர்கள் தங்களது தயாரிப்புகளை எளிதில் சந்தைப்படுத்த இந்த கண்காட்சி பெரிதும் துணை புரிந்து வருகிறது.

கடந்த ஆண்டு விற்பனை குறியீடாக ரூ.1.50 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.85.94 இலட்சம் மதிப்பிலான பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் 40 கைவினைஞர்கள் நேரடியாகவும், 500-க்கு மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்றனர்.

நடப்பு விற்பனை கண்காட்சிக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான பொம்மைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 60 கைவினைஞர்கள் நேரடியாகவும், 700-க்கு மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.

இக்கண்காட்சியை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றியும்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கண்காட்சி விற்பனையை அறிமுகம் செய்தும் வைத்தனர்.

இதையும் படிங்க: சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு ..அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.