புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்' - அமித்ஷா அறிவிப்பு!

author img

By

Published : May 24, 2023, 2:15 PM IST

Tamil nadu Sengol

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரச் செங்கோல் நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு குறித்து, அதன் 24ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேட்டி அளித்திருந்தார். அதில், "1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட ரீதியிலான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, சுதந்திரத்தை எந்த நடைமுறையில் பெறுவது? என்பது குறித்த கேள்வி எழுந்தது.

அப்போது, தமிழ்நாட்டில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வதைப் போலவே, நாமும் செங்கோல் மூலமாக ஆட்சியை வெள்ளைக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என ராஜாஜி தெரிவித்துள்ளார். அதற்கு நேருவும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் செய்யப்பட்டது. அந்த செங்கோலை எடுத்துக் கொண்டு ஆதீன அடியார்கள் டெல்லி சென்றனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டபோது, மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டார். செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து, ஓதுவாமூர்த்திகள் தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.

அரசு சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் தற்போது அலகாபாத் நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், கண்ணாடி பேழைக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் பாரதத்தின் ஆட்சி மாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த கட்டடத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரச் செங்கோல் வைக்கப்படவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் இன்று(மே.24) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமித்ஷா, இந்த செங்கோலுக்குப் பின்னால் ஒரு பெரிய பாரம்பரியம் உள்ளது என்றும், வரலாற்றில் செங்கோலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த செங்கோல் ஆட்சி மாற்றத்தின்போது வழங்கப்பட்டது என்றும், இந்த செங்கோலின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், அதனை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

வரும் 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வேளையில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் அங்கு வைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த செங்கோல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஆங்கிலேயர்களிடமிருந்து நேருவிடம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஜனநாயகத்தின் ஆன்மா பறிப்பு" நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை புறக்கணித்த 19 கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.