கேரளாவில் லாரி - மினி பஸ் மோதி விபத்து: 23 தமிழர்கள் படுகாயம்!

author img

By

Published : May 25, 2023, 12:22 PM IST

கேரளாவில் லாரி மீது தமிழகத்தின் மினி பஸ் மோதல் - 23 பேர் படுகாயம்

கேரள மாநிலம் திருச்சூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி பஸ் மோதியதில் தமிழகத்தை சேர்ந்த 23 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மினி பேருந்து ஒன்று, பயணிகள் உடன் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், இன்று (மே 25) அதிகாலை 4 மணியளவில் திருச்சூர் மாவட்டம் தாலூர் ஜெருசலேம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த மினி பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால், அந்த இடத்தில் என்ஜின் பழுதால் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கத்தின் மீது மினி பேருந்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து, காயம் அடைந்த அனைவரும் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், காயம் அடைந்த 23 பேரில், 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, நேற்றைய முன்தினம் (மே 23) அன்று இரவு 7 மணியளவில், இடுக்கி மாவட்டத்தின் பூப்பரா சூண்டல் என்ற குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது.

எனவே, இந்த காட்டு யானையை அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் இருந்த காட்டு யானை, அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளது. அந்த நேரத்தில், அதிவேகமாக வந்த கார் காட்டு யானை மீது மோதி உள்ளது.

இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை, காரை ஆக்ரோஷமாக தாக்கி உள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த தங்கராஜ் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல், கடந்த 3ஆம் தேதி மூணாறு செல்வதற்காக வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், எதிர் திசையில் கேரளாவில் இருந்து டீத்தூள் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இவ்வாறு கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், இரு மாநில நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் ஆகியோர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தகுந்த நடவடிக்கைகளை எடுத்து விபத்துகளையும், யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: காரை 17 கி.மீ தள்ளிச் சென்ற திருடர்கள் - சுவாரசிய பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.